பதிவு செய்த நாள்
30
ஆக
2014
01:08
தர்மபுரி: மாவட்டம் முழுவதும், இந்து அமைப்புகள், பொதுமக்கள் சார்பில், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில், ஆண்டுதோறும் இந்து அமைப்புகள், நண்பர்கள் குழுவினர், ஆன்மிக அமைப்புகள் சார்பில், மாவட்டம் முழுவதிலும் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, ஏழு நாட்கள் வரையில் பூஜைகள் நடக்கும். இந்தாண்டும், மாவட்டம் முழுவதிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. போலீஸார் பல்வேறு விதிமுறைகளை புதிதாக வகுத்துள்ள நிலையில், புதிய விநாயகர் சிலைகள் வைப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டு, கடைசி நேரத்தில் மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதால், பல்வேறு இடங்களில், நேற்று காலை முதல் மதியம் வரை விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன.
* தர்மபுரி சாலை விநாயகர் கோவிலில், அதிகாலை ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள், வெள்ளி கவசம் சாத்துதல் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
* தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில், நெசவாளர் காலனி சக்தி விநாயகர் வேல்முருகன் கோவில், அன்னசாகரம் சிவசுப்பிரமணிய ஸ்வாமி கோவில், பாரதிபுரம் விநாயகர் கோவில், அப்பாவு நகர் விநாயகர் கோவில், பாலக்கோடு ஞானபிள்ளையார் கோவில், தேரடி விநாயகர் கோவில், கடை வீதி, ஏளுர் விநாயகர் கோவில் உட்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து விநாயகர் கோவில்களிலும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வெள்ளி மற்றும் தங்க கவசம் சாத்துப்படி நடந்தது.
* தர்மபுரி நகரில் நரசய்யர் குளம், சத்திரம் மேல்தெரு, குமாரசாமிப்பேட்டை, பிடமனேரி, எம்.ஜி.ஆர்., நகர், கோட்டை, அக்ரஹார தெரு, சித்தவீரப்ப செட்டி தெரு மற்றும் பழைய தர்மபுரி, மதிகோன்பாளையம், காமாட்சியம்மன் கோவில் தெரு, குண்டலப்பட்டி, இலக்கியம்பட்டி, மாந்தோப்பு, ஒட்டப்பட்டி, ஹவுசிங் போர்டு, அதியமான்கோட்டை, அரூர், பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி உட்பட மாவட்டத்தின் பல பகுதிகளில், பொது இடங்களில் விநாயர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
* காரிமங்கலம் மலைக்கோவிலில் அதிகாலை விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தது. ஏற்பாடுகளை, விழாக்குழு தலைவர் எம்.எல்.ஏ., அன்பழகன், குருக்கள் பிரகாஷ் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
* காரிமங்கலம் மந்தைவீதி ராஜகணபதி கோவிலில், கடைவீதி விநாயகர் கோவில் உட்பட அனைத்து விநாயகர் கோவில்களிலும் ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தது. மந்தை வீதியில் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் நடந்த விழாவில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. முன்னாள் சேர்மன் ராமன், ஆசிரியர் சங்கரன், வீரப்பன் செட்டியார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர்.
* காரிமங்கலம் மொரப்பூர் ரோடு, பஸ் ஸ்டாண்ட், அகரம் ரோடு, கெரகோடஅள்ளி, முருக்கம்பட்டி, கடைவீதி, மாட்லாம்பட்டி, பெரியாம்பட்டி, அடிலம், பொம்மஅள்ளி, திண்டல், காளப்பனஅள்ளி, குப்பாங்கரை, பூமாண்டஅள்ளி, பேகாரஅள்ளி உள்ளிட்ட பல இடங்களில் பக்தர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள், இளைஞர் மன்றத்தினர் சிறிய மற்றும் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் வைத்து கொண்டாடினர். பல்வேறு இடங்களில் பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.