பதிவு செய்த நாள்
01
செப்
2014
12:09
நரசிங்கபுரம் : நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில், நேற்று அன்னகூட்ட மகா உற்சவம் நடந்தது. கடம்பத்துார் ஒன்றியம், பேரம்பாக்கம் அடுத்துள்ள நரசிங்கபுரத்தில், லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் மாதந்தோறும் பெருமாள் பிறந்த நட்சத்திரமான சுவாதி அன்று மூலவருக்கு திருமஞ்சனம் நடைபெற்று வருவது வழக்கம்.அன்றைய தினத்தில் நெய் தீபம் ஏற்றி, கோவிலை, 32 முறை வலம் வந்தால், திருமண தடை நீங்கும். நினைத்த காரியம் கைக்கூடும் என்ற ஐதீகத்தில் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து, தங்களது வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர். அதன்படி, நேற்று சுவாதி மற்றும் அன்னகூட்ட மகா உற்சவம் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதையொட்டி, காலை 5:30 மணிக்கு, கோ பூஜையும், தொடர்ந்து 9:30 மணிக்கு யாக பூஜையுடன் மூலவருக்கு திருமஞ்சனம் நடந்தது. பகல் 11:00 மணிக்கு மூலவருக்கு முன்பு பலவகையான காய்கறிகள், இனிப்புகள், பலகாரங்கள் ஆகியவை வைக்கப்பட்டு அன்னகூட்ட மகா உற்சவம் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.அதன்பின், மாலை 5:00 மணிக்கு, உற்சவர் நரசிம்ம பெருமாள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.