பதிவு செய்த நாள்
02
செப்
2014
12:09
அன்னுார் : அன்னுார் அருகே, 400 ஆண்டு பழமையான மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, வரும் 5ம் தேதி துவங்குகிறது. கானுார்புதுார், மாகாளியம்மன் கோவில், 400 ஆண்டு பழமையானது. இக்கோவில் வளாகத்தில் விநாயகர், வள்ளி தெய்வானை உடனமர் முருகன், துர்க்கையம்மன், தட்சிணாமூர்த்தி ஆகிய தெய்வங்களும், நவகிரகங்களும் உள்ளன. கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து, கும்பாபிஷேக விழா, வரும் 5ம் தேதி காலை கணபதி வேள்வி, திருவிளக்கு வழிபாடு, காப்பணிவித்தலுடன் துவங்குகிறது. 6ம் தேதி காலையில் இரண்டாம் கால வேள்வியும், மதியம் கேரள சென்டை மேள இசை நிகழ்ச்சியும், மாலையில் மூன்றாம் கால யாக வேள்வியும் நடக்கிறது. 7ம் தேதி காலை 7.00 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. பின்னர் மகா அபிஷேகம், பேரொளி வழிபாடு நடக்கிறது. விழாவில் சிரவை ஆதீனம் குமரகுருபர அடிகள், பேரூர் இளையபட்டம் மருதாசல அடிகள் அருளுரை வழங்குகின்றனர். இரவு கலைநிகழ்ச்சி நடக்கிறது.பேரூர், சாந்தலிங்கர் அருள்நெறி மன்றத்தினர் தமிழ் முறைப்படி வேள்வி வழிபாடுகளை செய்கின்றனர்.