பதிவு செய்த நாள்
03
செப்
2014
12:09
சென்னை : வரும் 6 மற்றும் 7ம் தேதிகளில் நடக்க உள்ள, விநாயகர் சதுர்த்தி ஊர்வல பாதுகாப்பில், 18 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என, போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் தெரிவித்தார். நேற்று, பத்திரிகையாளர்கள்சந்திப்பில், போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் அளித்த பேட்டி: சென்னையில் வைக்கப்பட்டு உள்ள, 1,600 விநாயகர் சிலைகளுக்கும், தலா ஒரு போலீஸ்காரர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். வரும், ௬ மற்றும் ௭ம் தேதிகளில் நடக்க உள்ள விநாயகர் சிலை ஊர்வல பாதைகளில், ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், அந்த இடங்களுக்கு, ஐந்து நிமிடங்களில், ரோந்து வாகனம் செல்லும் வகையில், திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. ரோந்து வாகனங்களில், 200 கண்காணிப்பு கேமராக்கள், முதல்வர் உத்தரவின்பேரில் பொருத்தப்பட உள்ளன. மேலும், பதற்றமானவை என, அறியப்பட்டுள்ள, இடங்களில், 10 கேமராக்கள் மூலம் உயர் போலீஸ் அதிகாரிகள் கண்காணித்து, வேண்டிய உத்தரவுகளை பிறப்பிப்பர். ரோந்து வாகன போலீசாருக்கு, மூன்று ஷிப்ட் முறையில், எட்டு மணி நேர பணி என, வரையறுக்கப்பட்டுள்ளதால், இந்த திட்டம், சட்டம் - ஒழுங்கு பராமரிப்பு மற்றும் போக்குவரத்து மேலாண்மைக்கு தக்க பலன் அளிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஊர்வல பாதுகாப்புக்கு என, 18 ஆயிரம் போலீசார் குவிக்கப்படவுள்ளனர். முதற்கட்டமாக, வண்ணாரப்பேட்டை, எழும்பூர், திருவல்லிக்கேணி, கோடம்பாக்கம், கே.கே.நகர், சேலையூர், தாம்பரம், வேளச்சேரி பகுதிகள் பதற்றமானவை என, அறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் பாதுகாப்புக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.