பதிவு செய்த நாள்
05
செப்
2014
12:09
ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த, 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த, தமிழகத்தை சேர்ந்த நடராஜர், அர்த்தநாரீஸ்வரர் சிலைகளை, அந்நாட்டு பிரதமர் டோனி அபோட், இந்திய பிரதமர் மோடியிடம் இன்று ஒப்படைக்கிறார். அறத்தையும், ஆன்மீகத்தையும் இரு கண்களாய் போற்றும் தமிழகத்தில், பல்வேறு சமயங்கள் ஓங்கி வளர்ந்த போதும், சைவம் வளர்ந்த கதை மிகச் சிறப்பு வாய்ந்தது. சோழர் காலத்தில், காணும் இடமெல்லாம் சிவலிங்கப் பிரதிஷ்டையும், சிவனடியார்களின் சேவையும் பல்கிப் பெருகின. கடந்த, 900 ஆண்டுகளுக்கு முன், அரியலூர் மாவட்டம், ஸ்ரீபுரந்தான் கிராமம், பிரகதீஸ்வரர் கோவிலில், மெய்யன்பர்களால் வழிபாடு செய்யப்பட்ட, நடராஜர் சிலை, சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரால், கடத்தப்பட்டு, ஆஸ்திரேலிய தேசிய அருங்காட்சியகத்திற்கு விற்கப்பட்டது. அதேபோல், விருத்தாசம், விருத்தகிரீஸ்வரர் கோவிலில் இருந்த அர்த்தநாரீஸ்வரர் கற்சிலையும், ஆஸ்திரேலியாவிற்கு கடத்தப்பட்டது. இதில், கடத்தல்காரர்கள் பல கோடி ரூபாய் லாபம் பார்த்தனர். கடத்தி கொடுத்த தமிழக திருடர்கள், சில ஆயிரம் ரூபாய் பெற்றனர். இதுதொடர்பான வழக்கு, தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் முன்னெடுக்கப்பட்டது. சிலைகள் தமிழகத்தை சேர்ந்தவை என பல ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டது. அதையடுத்து, சிலைகள் விரைவில், இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என, கடந்த மே மாதம், ஆஸி., தேசிய அருங்காட்சியக நிர்வாகம் தெரிவித்தது. கடந்த, 1970ம் ஆண்டில், இரு நாட்டு கலைப் பொக்கிஷங்கள் அந்தந்த நாடுகளிடம் திரும்ப ஒப்படைக்கப்படும் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில், சிலைகளை இந்தியா கோரி வந்தது, எனினும், அதில் கடந்த சில மாதங்களாக தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில், இந்திய அரசின் பல்வேறு முயற்சிகளுக்குப் பின், ஸ்ரீபுரந்தான் நடராஜர், விருத்தாசலம் அர்த்தநாரீஸ்வரர் சிலைகள் ஆகியவற்றை, இந்தியாவிடம் ஒப்படைக்க ஆஸி., அரசு முன்வந்துள்ளது.
அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட், இன்று பிரதமர் மோடியிடம் அந்த சிலைகளை ஒப்படைக்கிறார். அதற்காக, டில்லியில் இன்று சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த புகழ் பெற்ற நடராஜர், அர்த்தநாரீஸ்வரர் சிலைகள் மீண்டும் நாடு திரும்பியுள்ளது, மெய்யன்பர்களை மட்டுமின்றி நாட்டு மக்கள் அனைவரையும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. இதேபோல், மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு, இந்தியாவிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட அல்லது விற்கப்பட்ட புராதான சின்னங்கள் மற்றும் சிலைகள் அனைத்தையும் மீட்டு கொண்டு வர வேண்டும் என்பதே, அனைவரின் எதிர்பார்ப்பு.