பதிவு செய்த நாள்
05
செப்
2014
12:09
புதுச்சேரி : ஏனாமில், 10 ஆயிரம் பேனாக்கள் வைத்து, விநாயகருக்கு பூஜை நடந்தது. புதுச்சேரியின் ஒரு பகுதியான ஏனாம், சீமாந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. நகரின் முக்கிய இடங்களில், பிரமாண்டமான விநாயகர் சிலைகளை வைத்து, ௯ நாட்களுக்கு, விநாயகர் சதுர்த்தி விழாவை ஏனாம் மக்கள் கொண்டாடுவர்.மேலும், விநாயகர் சிலைக்கு முன் பேனாக்களை வைத்து பூஜை செய்து, மாணவ மாணவிகளுக்கு வழங்குவதும், ஏனாமின் பாரம்பரியமான வழக்கமாகும். இதன்மூலம், விநாயகரின் அருளால், மாணவ மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்குவர் என்பது நம்பிக்கை. இந்தாண்டும், விநாயகர் சதுர்த்தி விழா, ஏனாமில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஏனாம் நகரப் பகுதியில் வைக்கப்பட்டுள்ள, ௧௦ அடி உயரமுள்ள, சிவராஜ வித்யா கணபதிக்கு, 10 ஆயிரம் பேனாக்களை வைத்து நேற்று முன்தினம் பூஜை நடந்தது.பூஜை முடிந்தவுடன், அனைத்து பேனாக்களும், மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டன.