பதிவு செய்த நாள்
08
செப்
2014
01:09
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அம்மன் நகரில், பஞ்சமுக விநாயகர் கோவிலில், விநாயகர் சதுர்த்தியையொட்டி நடந்த ஊர்வலத்தில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கிருஷ்ணகிரி, அம்மன் நகரில் பிரசித்தி பெற்ற பஞ்சமுக விநாயகர் கோவிலில், விநாயகர் சதுர்த்தி விழா, கடந்த, 29ம் தேதி துவங்கியது. அன்று முதல், தினமும் காலை, 6 மணிக்கு மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள், மாலை, 7 மணிக்கு உற்சவ மூர்த்தியை கொலு அமர்த்தி மங்களார்த்தி பூஜைகள் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான, பஞ்சமுக விநாயகர் ரதத்தில் உற்சவமூர்த்தி ஊர்வலம் நேற்று முன்தினம் இரவு விமரிசையாக நடந்தது. இரவில், ஊர்வலம் மேள தாளங்கள், முழங்க உற்சவ மூர்த்தி, ஒவ்வொரு வீடாக சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வீடுகளில் பூஜை தட்டுகள் வைத்து பக்தர்கள் வழிபட்டனர். இதையடுத்து, வாணவேடிக்கை நடந்தது. விழாவில், அம்மன் நகரை சேர்ந்தவர்கள் மற்றும் இளைஞர் மன்றத்தை சேர்ந்தவர்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை, சர்வசித்தி பஞ்சமுக விநாயகர் ஆலய விழாக்குழுவினர் செய்திருந்தனர்.