பதிவு செய்த நாள்
18
செப்
2014
02:09
நாமக்கல்; நைனாமலை வரதராஜ பெருமாள் கோவிலில், புரட்டாசி பெருவிழா, கோலாகலமாக துவங்கி உள்ளது. நாமக்கல் அடுத்த, புதன் சந்தை அருகே நைனாமலை உள்ளது. இங்கு, 2,600 அடி உயரம் கொண்ட மலை உச்சியில், வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இக்கோவில், பல்லவர் மன்னரால் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. கோவிலின் சில பகுதிகள், திருமலை நாயக்கரின் தம்பி ராமச்சந்திர நாயக்கர் கட்டியதற்கான சான்றுகள் உள்ளன. அடிவாரத்தில் இருந்து மலைப்பாதை வழியாக, 3,360 படிகளை கடந்து சென்றால் மட்டுமே, நின்ற நிலையில் வீற்றிருக்கும் குவலயவல்லி தாயார் சமேத வரதராஜ பெருமாளை தரிசிக்க முடியும். மலைப்பாதையில் வற்றாத ஊற்றுகளான "அரிவாள் பாழியும் மற்றும் "அமையா தீர்த்தம் எனும் "பெரிய பாழியும் அமைந்துள்ளது இக்கோவிலின் சிறப்பு. மலை உச்சியில் உள்ள, 120 அடி உயரம் கொண்ட, ஒரே பாறை மீது, இக்கோவில் கட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வரலற்று சிறப்பு மிக்க இக்கோவிலில், ஆண்டு தோறும் புரட்டாசி உற்சவ திருவிழா, வெகுவிமரிசையாக கொண்டாப்படுவது வழக்கம். இந்தாண்டு, புரட்டாசி விழா நேற்று துவங்கியது. அடிவாரத்தில் உள்ள, பாத மண்டப ஆஞ்சநேயர் கோவிலில், சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. ஸ்வாமி, தங்க கவசத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் ஸ்வாமியை வழிபட்டுச் சென்றனர். செப்டம்பர், 20ம் தேதி. 27ம் தேதி, அக்டோபர், 4ம் தேதி, அக்டோபர், 11ம் தேதி, அக்டோபர், 18ம் தேதி ஆகிய நாட்களில் புரட்டாசி பெருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களில், ஸ்வாமிக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடக்கும். புரட்டாசி உற்சவ பெருவிழாவை முன்னிட்டு, வாரந்தோறும், வெள்ளிக்கிழமை மாலை முதல், சனிக்கிழமை வரை, அரசின் சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.