பதிவு செய்த நாள்
18
செப்
2014
02:09
தலைவாசல்: தலைவாசல் அருகே, ஆறகளூரில், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, கால பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தலைவாசல் அருகே, ஆறகளூரில் உள்ள, காமநாதீஸ்வரர் கோவிலில், உன்மத்தர், ருருவர், குரோதானர், சண்டர், பீஷ்ணர், காலசம்ஹாரர், ஸ்ரீகால பைரவர் உள்பட எட்டு பைரவர் சிலைகள் உள்ளன. தேய்பிறை அஷ்டமி நாளில், எட்டு பைரவர் சிலைக்கும், அபிஷேக பூஜைகள் நடந்து வருகிறது. நேற்று முன்தினம், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, கால பைரவருக்கு, பால், நெய், தயிர், மஞ்சள், சந்தனம், தேன் உள்பட 16 வகையான அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டன. நள்ளிரவு 12 மணியளவில், வெள்ளி கவசம், புஷ்ப அலங்காரத்தில், காலபைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சேலம், விழுப்புரம், பெரம்பலூர், ஈரோடு, கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
* ஆத்தூர் கைலாசநாதர் கோவிலில் உள்ள, பிரித்தியங்கிரா தேவி கோவிலில், தேய்பிறை அஷ்டமியையொட்டி, சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தது. முன்னதாக, உலக நன்மை வேண்டி, யாக குண்டத்தில் வற்றல் மிளகாய், மூலிகைகள் கொட்டி சிறப்பு யாக பூஜை நடந்தது. பிரித்தியங்கிராதேவி மற்றும் சொர்ண பைரவர் ஸ்வாமிகள், வெள்ளி கவசம், புஷ்ப அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.