பதிவு செய்த நாள்
22
செப்
2014
11:09
சினிமா படப்பிடிப்புக்கு அனுமதிப்பது, புதிய கட்டுமான திட்டங்களை மேற்கொள்வது போன்ற தீட்சிதர்களின் நடவடிக்கைகளால், சிதம்பரம் நடராஜர் கோவில் பாதுகாப்பை தொல்லியல் துறை கையிலெடுக்கும் சூழல் உருவாகியுள்ளதாக பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர். சிறப்பு வாய்ந்தது:தமிழில் உள்ள மிகப்பழமையான நுாலான, திருமந்திரத்தில் குறிப்பிடப்படும், சிறப்பு பெற்ற தலமாக, சிதம்பரம் நடராஜர் கோவில் உள்ளது. இக்கோவிலை, 2,000 ஆண்டுகளுக்கும் மேலாக தீட்சிதர் சமூகம் நிர்வகித்து வருகிறது.இவர்கள் நிர்வாகத்தில் முறைகேடு நடக்கிறது என்று கூறி, இக்கோவிலுக்கு அறநிலையத் துறை செயல் அலுவலரை நியமிக்க, 1987ல் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதை எதிர்த்து, தீட்சிதர்கள் சார்பில், பல்வேறு நீதிமன்றங்களில், தொடரப்பட்ட வழக்குகளின் முடிவாக, இந்த ஆண்டு, ஜனவரி, 6ம் தேதி உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்கியது.இத் தீர்ப்பில் செயல் அலுவலர் நியமனம் ரத்து செய்யப்பட்டதுடன், கோவில் நிர்வாக பணி குறித்த சில வழிகாட்டு நெறிமுறைகளும் வழங்கப்பட்டன. தீட்சிதர்கள் மட்டுமல்லாது, நாடு முழுவதிலும் உள்ள பக்தர்கள் இத்தீர்ப்பை வரவேற்றனர்.
தொல்லியல் சர்ச்சை: இந்நிலையில், சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்தில், புதிதாக ஒரு யாகசாலை மண்டபம் கட்ட திட்டமிடப்பட்டு, அதற்கான துாண்கள் அமைக்க, பள்ளங்கள் தோண்டப்பட்டன. இதற்கு தீட்சிதர்களுக்குள் எழுந்த எதிர்ப்பு மற்றும் பொது தீட்சிதர் செயலர் விடுத்த அறிவிப்பு காரணமாக, மண்டப திட்டம் கைவிடப்பட்டு பள்ளங்கள் மூடப்பட்டன. இதையடுத்து, இக்கோவில் வளாகத்தில் புதிய மண்டபம் கட்டப்போவதாக கூறி, சிலர் அதற்கான நன்கொடை வசூலை துவங்கியுள்ளனர்.இந்நிலையில், கடந்த ஆடி பதினெட்டு அன்று, பிரபல தனியார் ஊதுவர்த்தி நிறுவனத்துக்கான, விளம்பர படம் எடுப்பதற்காக கோவில் வளாகத்தில் படபிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இதற்காக, ஏராளமான வாகனங்கள் கோவில் வளாகத்தில் அனுமதிக்கப்பட்டதால், பக்தர்களின் வருகை பாதிக்கப்பட்டது. இந்த புகாரை அடுத்து, ’இனி படப்பிடிப்புகளுக்கு அனுமதிக்க மாட்டோம்’ என, பொது தீட்சிதர் செயலர் அறிவித்தார். இருப்பினும், தற்போது வேறு ஒரு நிறுவனம் சார்பில், படப்பிடிப்பு நடத்த, தீட்சிதர்கள் சிலரிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படி அடுத்தடுத்து புகார்கள் வரும் நிலையில், கோவிலின் பாரம்பரிய பழமை தன்மையை பாதுகாக்க, தொல்லியல் துறையினர் தலையிட வேண்டிய சூழல் உருவாகிறது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் இதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அபாயம்: இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத தீட்சிதர் ஒருவர் கூறியதாவது: கோவிலின் புராதன வழக்கங்களுக்கும், ஆச்சாரங்களுக்கும் விரோதமாக படப்பிடிப்பு நடைபெறுவதை பெரும்பாலான தீட்சிதர்கள் விரும்பவில்லை. குறிப்பிட்ட சில தீட்சிதர்கள் பொது நிர்வாகத்தை மதிக்காமல், கோவில் வழக்கங்களுக்கு எதிராக செயல்படுகின்றனர். இந்நிலை தொடர்ந்தால், பெரும் சட்ட போராட்டத்தால் அறநிலையத் துறையிடம் இருந்து மீண்ட கோவில், தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டுக்கு சென்றுவிடும் அபாயம் உருவாகியுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
வாய்ப்பு: இதுகுறித்து, ஆலய வழிபடுவோர் சங்கத் தலைவர் டி.ஆர்.ரமேஷ் கூறியதாவது: சிதம்பரம் கோவில்களிலோ அல்லது வேறு கோவில்களிலோ கோவில் வழக்கத்திற்கு விரோதமாக படப்பிடிப்போ, பொது விருந்தோ, கலை நிகழ்ச்சி என்ற பெயரில் பிற நிகழ்ச்சிகளையோ நடத்தக் கூடாது. புதிய வழிபாட்டு முறைகளை கொண்டு வரக்கூடாது. பழைய பூஜைகளை கைவிடக் கூடாது. இவை அனைத்தும், 1947ம் ஆண்ட கோவில் நுழைவு சட்டத்திற்கு விரோதமானவை.இந்த சட்டத்துக்கு புறம்பாக நடக்கும் கோவில் அறங்காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது.இத்தகைய முறைகேடுகள் காரணமாக, கோவிலின் பாரம்பரிய தன்மையை பாதுகாப்பது என்ற பெயரில், தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டுக்கு செல்ல வழி ஏற்பட்டுவிடும். அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால், கோவிலில் பல்வேறு வழக்கமான செயல்பாடுகள் பாதிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.