பதிவு செய்த நாள்
23
செப்
2014
02:09
திருப்பூர் : பக்தி ஒன்றே இறைவனை அடைய எளிய வழி; பகவத் கீதையில் அதற்கும் வழிமுறைகளை கிருஷ்ண பரமாத்மா கூறியுள்ளார், என, உபன்யாசகர் வேளுக்குடி கிருஷ்ணன் பேசினார். திருப்பூர், காங்கயம் ரோடு காயத்ரி மகாலில், ஸ்ரீமத் பகவத் கீதை சொற்பொழிவு நடந்து வருகிறது. இதில், வேளுக்குடி கிருஷ்ணன் பேசியதாவது: கீதையில், அர்ச்சுனனுக்கு கிருஷ்ண பரமாத்மா உபதேசம் செய்கிறார். "பக்தி யோகத்தால் மட்டுமே என்னை அடைய முடியும்; கடவுள் மீது பக்தி செலுத்துவது இனிமையாக இருக்கும். என்னால் இந்த உலகம் படைக்கப்பட்டுள்ளது; ஒலியாய், ஒளியாய், காற்றாய், அணுவாய், உயிரினங்கள் என அனைத்திலும் நீக்கமற நிறைந்திருக்கிறேன்.உனது சரீரத்தை ஆத்மா தாங்குகிறது. அந்த ஆத்மா, நானாக இருக்கிறேன். இந்த உலகத்தை நான் தாங்குகிறேன், என, கிருஷ்ணர் கூறுகிறார். அர்ச்சுனனுக்கு, தனது விஸ்வரூப காட்சியை அருள்கிறார். பத்து திக்கும் கிருஷ்ணரே வியாபித்திருக்கிறார். உயர்ந்த திருமேனியும், அண்டசராசரமும், அனைத்து ஜீவராசிகளுக்கும் அவருக்குள் அடைக்கலமாகியுள்ளன. இந்த பிரமாண்டத்தை பார்க்க முடியாத அர்ச்சுனன், "ஒன்றுமே தெரியவில்லை சுவாமி என்கிறார். என்னை பார்க்க, எனது பக்தனான உனக்கு இரு கண்களை தருகிறேன் என்கிறார். கண்களை பெற்றுப்பார்த்த அர்ச்சுனனுக்கு புல்லரிக்கிறது. அவ்வளவு பிரமாண்டம். அர்ச்சுனனுக்கு காட்சியளித்த இறைவன், தன் மீது பக்தி செலுத்தும் அனைவருக்கும் காட்சியளிக்கிறார்; ஆனால், அதற்கு பக்தியின் மூலம் இறைவனிடம் கண்களை பெற வேண்டும். இறைவன் நமக்கு கொடுத்துள்ள கர்மத்தை நாம் தவறாமல் செய்ய வேண்டும். பக்தி ஒன்றே கடவுளை அடைய எளிய வழி. அதற்கான வழிமுறைகள் கீதையில் விளக்கப்பட்டுள்ளன.இவ்வாறு, அவர் பேசினார்.