பதிவு செய்த நாள்
23
செப்
2014
02:09
திருப்பூர் : துர்கா பூஜைக்காக, மேற்குவங்கத்தில் இருந்து திருப்பூர் வந்துள்ள கைவினைஞர்கள், கங்கை ஆற்று மண் மற்றும் சணல் பொருட்களால், துர்காதேவி சிலைகளை வடிவமைத்து அசத்துகின்றனர். பனியன் தொழில் நிமித்தமாக திருப்பூருக்கு வரும் வெளிமாவட்ட, மாநில மக்கள், இங்கேயே நிரந்தரமாக தங்கி விடுகின்றனர். 15 ஆண்டுகளில், இவர்களில் பலர் பனியன் கம்பெனி அதிபர்களாகவும், தொழிலாளிகளாகவும் மாறியுள்ளனர். மேற்குவங்க மாநிலத்தில் இருந்து வந்த சுமார் 2,000 பேர் இந்நகரில் வசிக்கின்றனர்.திருப்பூர் பெங்காலி அசோசியேஷன் என்ற அமைப்பை ஏற்படுத்தி, ஆண்டுதோறும் துர்கா பூஜையை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இங்கு வசிக்கும் பெங்காலி மக்களின் வழிபாட்டுக்காக, துர்கா சிலைகள் வடிவமைக்கும் பணி நடந்து வருகிறது. மேற்குவங்கத்தில் இருந்து வந்துள்ள கைவினை கலைஞர்கள், வைக்கோல் சருகு, கங்கை ஆற்று மண் (சேற்றுமண்), சணல் கயிறு போன்றவற்றை பயன்படுத்தி சிலை வடிவமைக்கின்றனர். திருப்பூர் பெங்காலி அசோசியேஷன் நிர்வாகி பரமேஸ்வர் கூறுகையில், திருப்பூரில் துர்கா பூஜை, வரும் 29ல் துவங்கி ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது. துர்கா சிலை வடிவமைப்பதற்காக, கைவினைஞர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். வரும் 24ம் தேதி முதல், சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணி நடக்கும். சவுடேஸ்வரி திருமண மண்டபத்தில், துர்கா பூஜை கொண்டாடப்படும், என்றார்.