பதிவு செய்த நாள்
24
செப்
2014
01:09
தஞ்சாவூர்:தஞ்சாவூர் பெரிய கோவில் வழியாக, கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்றது. பாரம்பரியமிக்க இந்த கோவில், தொல்பொருள் ஆய்வுத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.பழமை மாறாமல் பராமரிக்கப்பட்டு வரும், இக்கோவிலை சுற்றியுள்ள அகழி துார்வாரும் பணி, சமீபத்தில் நடந்தது. ஆக்ரமிப்பு காரணமாக பணிகள் முழுமையடையவில்லை. இதற்கிடையே, அகழியை ஓட்டியுள்ள சுற்றுச்சுவரின் ஒருபகுதி இடிந்து விழுந்தது. கோவிலின் ஸ்திர தன்மையையும், பாதுகாப்பையும் உறுதிபடுத்தவேண்டும் என்ற, கோரிக்கை மக்களிடையே எழுந்தது. இதையடுத்து, கோவிலை ஆய்வு செய்த, தொல்பொருள் ஆய்வுத்துறையினர், கனரக வாகனங்கள் செல்வதால், அதிர்வு ஏற்பட்டு, சுற்றுச்சுவரின் ஒருபகுதி இடிந்து விழுந்துள்ளதாகவும், அதன் வழியாக, கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்குமாறும், மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை அளித்தனர். இதனடிப்படையில், நேற்று காலை முதல், பெரியகோவில் வழியாக லாரி, பஸ் உள்ளிட்ட, கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பெரியகோவில் வழி செல்ல வேண்டிய வாகனங்கள் அனைத்தும், பழைய பஸ் ஸ்டான்டில் இருந்து, ஆற்றுப்பாலம், ரயிலடி வழியாகவும், கலெக்டர் அலுவலகம், மேம்பாலம் வழியாகவும் திருப்பி விடப்பட்டுள்ளது. மேலும், கனரக வாகனங்கள் செல்வதை தடுத்து, மாற்றுப் பாதைகளில் திருப்பி விடுவதற்காக, பெரியகோவில் முன்பும், சோழன் சிலை முதல், மேம்பாலம் வரையிலும், போக்குவரத்து போலீசார் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே, மேம்பாலம் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் துவங்கியதைத் தொடர்ந்து, ரயிலடி வழியாக சென்று கொண்டிருந்த, பஸ், லாரி உள்ளிட்ட, கனரக வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து, ரயிலடி திடல் வழியாக, புதிய பஸ் ஸ்டாண்ட் செல்ல வேண்டிய பஸ் உள்ளிட்ட வாகனங்கள், பெரியகோவில், மேம்பாலம் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது.தற்போது, பெரியகோவில் வழியாக கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால், தஞ்சை மாநகரில் வாகன போக்குவரத்து இடியாப்ப சிக்கலில் உள்ளது.