பதிவு செய்த நாள்
26
செப்
2014
11:09
ராமேஸ்வரம் : நவராத்திரி விழாவை முன்னிட்டு, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நேற்று, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதி அருகே ஸ்ரீசக்கரா சுவாமிக்கு கோயில் குருக்கள் உதயகுமார், மஞ்சள், பால், பஞ்சமிர்தம், தேன், நவதானிய அபிஷேகம் செய்து, பூஜை நடத்தினார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். நேற்று மாலை, அம்மன் சன்னதி அருகில் அமைக்கப்பட்ட அலங்கார மேடையில், பர்வதவர்த்தினி அம்மன் மக்களுக்கு பசிபிணி நீக்கும் அன்னபூரணி திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனைதொடர்ந்து 7 நாட்களுக்கு, பர்வதவர்த்தினி அம்மன் மகா லெட்சுமி, சிவதுர்க்கை, சரஸ்வதி, கௌரி சிவபூஜை, சாரதாம்பிகை, மஹிஷாஸூரமர்த்தினி மற்றும் துர்க்கா, லெட்சுமி, சரஸ்வதி திருக்கோலத்தில் காட்சியளிக்க உள்ளார். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் இணை கமிஷனர் செல்வராஜ் தலைமையில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
பரமக்குடி: நவராத்திரி விழாவை முன்னிட்டு பரமக்குடி முத்தாலம்மன், மீனாட்சி அம்மன், ஈஸ்வரன் கோயிலில் விசாலாட்சி அம்மன், பெருமாள் கோயிலில் சவுந்தரவல்லி தயாருக்கு தினமும் சிறப்பு அலங்காரம் நடைபெறுகிறது. அனுமார் கோதண்டராமசாமி கோயிலில் சிறப்பு அலங்காரமும், அக்., 3 ல் ராமர் பட்டாபிஷேகமும் நடக்கிறது. எமனேஸ்வரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் பெருந்தேவி தாயார், நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயிலில் சவுந்தர்யநாயாகி அம்மன் என தினமும் மாலை பல்வேறு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெறுகிறது. அக்., 3 ல் அனைத்து கோயில்களிலும் அம்மன் வன்னிகாசூரனை வதம் செய்வது நடைபெறும்.