நவராத்திரியின் மூன்றாம் நாளில், அம்பாளை இந்திராணியாக வழிபாடு செய்ய வேண்டும். வஜ்ராயுதம், சூலம், கதாயுதம் தாங்கி யானை வாகனத்தில் அமரும் வகையில் அலங்கரிக்க வேண்டும். மலர்களால் கோலமிட்டு மரிக்கொழுந்து, சம்பங்கி பூக்களால் அர்ச்சிக்க வேண்டும். கீர்த்தனைகளைப் பாடி வழிபடுவதால் தனம், தானியம் பெருகி வாழ்வு மேம்படும். மதுரை மீனாட்சி இன்று சயனத் திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறாள். பட்டு மெத்தையில் துயிலும் விதத்தில் அம்பிகையைக் காண்பது வித்தியாசமானது. இந்நிலைக்கு ராஜயோக முறையில் விளக்கம் அளிப்பர். உடம்பிலுள்ள குண்டலினி சக்தியானது ஆறு ஆதாரங்களைக் கடந்து மேலே சென்று, இருபுருவத்திற்கு நடுவிலுள்ள ஆக்ஞா சக்கரத்தில் ஒடுங்கும். இந்த நிலையில் அம்பாளை வணங்குவது மன ஒருமைப்பாட்டைத் தரும். மாணவர்கள் இந்தக் கோலத்தை தரிசிப்பது மிகவும் நல்லது. துாங்காமல் மதுரையாளும் அன்னை மீனாட்சி, நம் அன்புக்கு கட்டுப்பட்டு சயனத்தில் சாய்ந்திருக்கப் போவது வித்தியாசமான கோலம் தானே!