நவராத்திரியின் நான்காம் நாளில், அம்பாளை மகாலட்சுமியாக வழிபாடு செய்ய வேண்டும். கையில் செந்தாமரை மலர்களை ஏந்தியவளாக அபய, வரத ஹஸ்தம் கொண்டவளாக அலங்கரிக்க வேண்டும். கஸ்துாரி மஞ்சள், முத்து மாலைஅணிவித்து அட்சதை, பிச்சி, முல்லை மலர்களால் அர்ச்சிக்க வேண்டும். பைரவி ராகத்தில் கீர்த்தனை பாடினால் செல்வ வளம் பெருகும்.
மதுரை மீனாட்சி நாளை முருகனுக்கு வேல் வழங்கும் திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறாள். சூரபத்மனின் கொடுமையைத் தாங்க முடியாத தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். சிவன் தன் நெற்றிக் கண்ணைத் திறந்து ஆறு தீப்பொறிகளை வெளியிட்டார். அவை சரவணப்பொய்கையில் சேர்ந்து ஆறு குழந்தைகள் ஆனது. கார்த்திகைப்பெண்கள் அவர்களை வளர்க்க, பார்வதி அவர்களை ஒருவராக்கி ’கந்தன்’ எனப் பெயரிட்டாள். பின் தன் ஆற்றலை ஒன்று திரட்டி வேலாயுதமாக்கி, முருகனுக்கு கொடுத்து சூரனை வென்று வெற்றிவேல் முருகனாக திகழும்படி வாழ்த்தினாள். அந்த கோலத்தில் நாளை காட்சி தரும் மீனாட்சியை நாமும் தரிசிப்போம். இந்தக் காட்சியைத் தரிசிப்போர் எல்லா செயல்களிலும் வெல்வர்.
நைவேத்யம் : தயிர்ச்சாதம்
பாடல் கண்களிக்கும்படி கண்டு கொண்டேன் கடம்பாடவியில் பண்களிக்கும் குரல் வீணையும் கையும் பயோதரமும் மண்களிக்கும் பச்சை வண்ணும் ஆகி மதங்கர்குலப் பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டி தன் பேரழகே.