நவராத்திரியின் எட்டாம் நாளான அஷ்டமி திதியன்று மகிஷனை வதம் செய்த கோலத்தில் அம்பிகை மகிஷாசுரமர்த்தினியாக உக்ர கோலத்தில் காட்சி தருவாள். இந்நாளை துர்காஷ்டமி என்பர். அதன் மறுநாளான நவமி திதியன்று வீடுகளில் சரஸ்வதிபூஜை சிறப்பாக நடக்கும். ஆனால், சிவாலயங்களில் அம்பிகை சிவபூஜை செய்வது வழக்கம். அசுரனாக இருந்தாலும், ஒரு உயிரைக் கொன்றதால் நேர்ந்த பாவம் நீங்கவும், மன அமைதி பெறவும் சிவபூஜை செய்வதாக ஐதீகம். துர்காஷ்டமி நாளில் அம்பாளைத் தரிசித்தவர்கள் சிவபூஜையன்று சாந்த நிலையில் தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம். இந்நாளில் கோயில்களில் அம்மனுக்கு சாந்தாபிஷேகமும் நடக்கும். ஒருகையில் பூக்கூடையும், இன்னொன்றில் மலருமாக சிவபூஜை செய்யும் அம்பிகையைத் தரிசிப்போருக்கு மனதில் சாந்தம் நிலைத்திருக்கும்.