பதிவு செய்த நாள்
06
அக்
2014
12:10
தி.நகர் : ”வேதங்கள் தனிப்பட்ட ஒருவருக்காக சொல்லப்பட்டவை அல்ல; அவை, சமூக நல்லிணக்கத்திற்காக சொல்லப்பட்டவை,” என, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் பேசினார். தி.நகர், கிருஷ்ண கான சபாவில், நேற்று முன்தினம் நடந்த, வீ.நாராயண அய்யர் நினைவு அறக்கட்டளையின், 25ம் ஆண்டு விருது வழங்கும் விழாவில், பங்கேற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் பேசியதாவது: வேதங்கள் தனிப்பட்டவர்களுக்கு சொல்லப்பட்டவை அல்ல; அவை, உலக ஒற்றுமைக்காகவும், சமூக நல்லிணக்கத்திற்காகவும் சொல்லப்பட்டவை. ஆனந்தமே பிரம்மம் என, அவை சொல்கின்றன.வேதங்கள் நாம் போக வேண்டிய இடத்திற்கு, அழைத்து செல்லாது.ஆனால், பயணிக்க வேண்டிய வழிகளை பற்றி கூறும்; வழிகளை தேர்ந்தெடுப்பது அவரவரின் விருப்பம். என் பார்வையில், சட்டமும் ஆன்மீகமும், சற்று வித்தியாசப்படுகின்றன. சட்டம், பொய்யை, மெய்யாக்க (உண்மை) முயல்கிறது. ஆன்மீகம் மெய்யை (உடம்பு) பொய்யாக்க முயல்கிறது.உலகில் இருள் என, ஏதுமில்லை என்று வேதம் சொல்கிறது. இருள் என்பது, குறைந்த ஒளியாகும்; வாழ்க்கையிலும், இருள் சூழும்போது, நம்மை நிறைந்த ஒளிக்கு அழைத்து செல்ல, இறைவனே ஒளிவடிவாக தோன்றுவான்.இவ்வாறு, அவர் பேசினார்.
விழாவில், பிரச்சனா வாச்சஸ்பதி விருது - சேஷாத்ரிநாத சாஸ்திரி, வாழ்நாள் சாதனையாளர் விருது - ராமகிருஷ்ணன், ஜி.கே., சுப்பிரமணிய அய்யர் விருது - ஆர். பார்த்தசாரதி, சங்கரி நாராயணன் விருது - கவுசல்யா சிவகுமார், ஜானகி வைத்தியநாதன் விருது - சுந்தர்ராம தீட்சிதர், தங்கம் கிருஷ்ணன் நினைவு விருது - கேசவ தீட்சிதர் ஆகியோருக்கு வழங்கப்பட்டன. மேலும் பல விருதுகளும் பலருக்கு வழங்கப்பட்டன.அதன் தொடர்ச்சியாக சேஷாத்ரிநாத சாஸ்திரிகளின் ’சனாதன தர்மா’ என்ற தலைப்பில் வேத உபன்யாசம் நடந்தது.