ஆனைமலை : சந்திரகிரகணத்தை முன்னிட்டு, ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் வரும் 8ம் தேதி நடை திருகாப்பு (நடை சாற்றுதல்) செய்யப்படுகிறது. கோவை மாவட்டத்தில் புகழ்பெற்ற அம்மன் கோவில்களில், ஆனைமலை மாசாணியம்மன் கோவிலும் ஒன்று. தமிழகத்திலேயே அம்மன் சயன நிலையில் (படுத்த நிலையில் ) காட்சி தருவது இங்கு மட்டும் தான். நீதி தேவதையாக, சக்தியின் அவதாரமாக இங்கு அம்மன் அருள்பாலிக்கிறார். மாசாணியம்மனை வழிபட, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகின்றனர். கோவில் உதவி ஆணையாளர் அனிதா கூறுகையில், வரும் 8ம் தேதி ஏற்படும் சந்திர கிரகணத்தை முன்னிட்டு, இக்கோவிலில் பிற்பகல் 2.45 மணி முதல் மாலை 6.04 மணி வரை நடை திருகாப்பு (நடை சாற்றுதல்) செய்யப்படும். கோவில் சுத்தம் செய்யப்பட்ட பின், இரவு 7.00 மணிக்கு நடை திறக்கப்படும்; வழக்கம் போல் பூஜைகள் நடைபெறும், என்றார்.