திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில்
ஆண்டுதோறும் நடக்கும் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா பிரசித்திபெற்றது. திருக்கல்யாண விழா நேற்று காலை காந்திமதி அம்பாள் சன்னதியில் கொடியேற்றம் சிறப்பு தீபாராதனையுடன் துவங்கியது. நேற்று துவங்கி வரும் 20ம் தேதி வரை தினமும் காலை 8 மணிக்கும், இரவு 8 மணிக்கும் காந்திமதி அம்பாள் சன்னதியிலிருந்து காந்திமதி அம்பாள் டவுண் நான்கு ரத வீதிகளிலும் உலா வரும். 19ம் தேதி இரவு ஒரு மணிக்கு காந்திமதி அம்மன் சன்னதியிலிருந்து தங்க முலாம் சப்பரத்தில் புறப்பட்டு கீழ ரதவீதி, தெற்கு ரத வீதி, பேட்டை ரோடு வழியாக அதிகாலை 5 மணிக்கு காமாட்சி அம்மன் கோயிலை சென்றடையவுள்ளது.
20ம் தேதி காலை கம்பா நதி காட்சி மண்டபத்தில் சுவாமி, அம்பாள் காட்சி கொடுக்கும் வைபவம் நடக்கிறது. மாலை சுவாமி, அம்பாள் நெல்லை டவுண் நான்கு வீதிகளிலும் வீதி உலா நடக்கிறது. 21ம் தேதி காலை அம்பாள் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் திருக்கல்யாண வைபவ விழா நடக்கிறது. 9.30 மணிக்கு சுவாமி, அம்பாள் நான்கு ரதவீதிகளிலும் பட்டின பிரவேசம் வீதி உலா நடக்கிறது. 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை அம்பாள் கோயில் ஊஞ்சல் மண்டபத்தில்அம்பாள் ஊஞ்சல் விழாவும், 3ம் தேதி இரவு சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் மறுவீடு பட்டினப்பிரவேசம் வீதி உலா நடக்கிறது.