சிதம்பரத்தில் இருந்து 25 கி.மீ., துõரத்திலுள்ள ஸ்ரீமுஷ்ணத்தில் பெருமாள் வராகமூர்த்தியாய் வீற்றிருக்கிறார். இரண்யாட்சன் என்ற அசுரன் பூமியைப் பாயாகச் சுருட்டி எடுத்துக் கொண்டு பாதாளம் சென்று விட்டான். இதனால் அந்தணர்கள் யாகம் ஏதும் செய்ய முடியவில்லை. யாகவேள்வி எதுவும் நடைபெறாததால், தேவர்களுக்கு அவிர்பாகம் (உணவு) கிடைக்க வில்லை. எனவே, பூமியைக் காக்கும்படி திருமாலிடம்வேண்டுகோள் விடுத்தனர். பெருமாள் வராகஅவதாரம் எடுத்து, பாதாளஉலகம் சென்று இரண்யாட்சனைக் கொன்றார். வராக (பன்றி) முகமும், மனித வடிவும் கொண்டு காட்சியளித்தார். தன் அயர்ச்சியும், களைப்பும் தீர ஸ்ரீமுஷ்ணத்தில் எழுந்தருளினார். அசுர சம்ஹாரத்தினால் பெருமானின் திருமேனியில் வியர்வை கொப்பளித்தது. அது நீரோட்டமாக மாறி, தெப்பக்குளம் ஆனது. அது தற்போது நித்ய புஷ்கரணி என்ற பெயரில் விளங்குகிறது. இப்பெருமானின் மேனி சுயம்வ்யக்தமாகும் (தானாகவே தோன்றியது). இவ்வூரில் முட்டப்பதி வாழும் முருகா! வராகப்பெருமாளின் மகளாகிய வள்ளிநாயகியை விரும்பி ஆசை கொண்ட முருகா! என்று அருணகிரிநாதரால் பாடல் பெற்ற முருகன் கோயில் உள்ளது. இந்த திருப்புகழ் பாடலில் வராகரின் பெயரும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.