பதிவு செய்த நாள்
15
அக்
2014
10:10
பவானி: பவானி சங்கமேஸ்வரர் கோவிலில், பிரசாத ஸ்டால், கோவில் நிர்வாகம் மூலம் திறக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பவானி சங்கமேஸ்வரர் கோவிலில், பக்தர்கள் வசதிக்காக, பிரசாத ஸ்டால் அமைத்து, அதில் சக்கரை பொங்கல், புளியோதரை, லட்டு, முருக்கு, அதிரசம் போன்றவைகள் பிரசாதமாக விற்பனை செய்யும் உரிமத்தை, தனியார் வசம் ஏலம் விடப்பட்டு, செயல்பட்டு வந்தது. கடந்த ஆண்டு, 19 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்ட பிரசாத ஸ்டால் விற்பனைக்கான உரிம ஏலம், இந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் முடிவடைந்தது. அதன்பின், கோவில் நிர்வாகம் மூலம், ஸ்டால் நடத்தப்பட்டும், ஸ்டாலை ஏலம் எடுக்க தனியார் எவரும் முன்வரவில்லை. இதனால், அக்டோபர் 1ம் தேதி முதல், பெருமாள் கோவில் வளாகத்தில் பிரசாத ஸ்டால் விற்பனையை துவங்கி, கோவில் நிர்வாகமே நடத்தி வருகிறது. இங்கு, 150 கிராம் சக்கரை பொங்கல், 100 கிராம் புளியோதரை, லட்டு, முருக்கு, அதிரசம் போன்றவைகள், பத்து ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். தவிர, கடந்த, 1 முதல், பத்தாம் தேதி வரை மட்டும், 22,720 ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளது. இதுபற்றி, கோவில் பணியாளர்கள் கூறியதாவது:
கடந்த ஜூன் மாதம், பிரசாத ஸ்டால் உட்பட பல்வேறு கடைகள் ஏலம் விடப்பட்டது. இதில், பிரசாத ஸ்டாலை ஏலம் கேட்காததால், மூன்று முறை ஏலம் ஒத்திவைக்கப்பட்டது. தமிழகத்தில், ஆறுபடை முருகன் கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில், ஸ்ரீரங்கம் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் பண்ணாரி மாரியம்மன் கோவில் உட்பட பல கோவில்களில், பிரசாத ஸ்டால்களை, கோவில் நிர்வாகம் மூலம் நடத்தி வருகின்றனர். அதுபோல, பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் ஸ்டாலை, தனியார் இடம் இருந்து, கோவில் நிர்வாகம் ஏற்று நடத்துகிறது, என்றனர்.