பதிவு செய்த நாள்
16
அக்
2014
12:10
தமிழகத்தில், நிதிவசதியும், இடவசதியும் உள்ள பெரிய கோவில்களில், யோகா மற்றும் தியான வகுப்புகளை மீண்டும் துவங்குவது குறித்து, அறநிலையத் துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். தமிழத்தில், அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், 38,000க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. இதில் நிதிவசதியும், இடவசதியும் உள்ள, 52 பெரிய கோவில்களில் யோகா, தியான வகுப்புகளை இலவசமாக நடத்த திட்டமிடப்பட்டது. கடந்த, 2008ல், இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன்படி, முதல்கட்டமாக, 10 கோவில்களில், இந்தவகுப்புகள், 2009ல் துவங்கப்பட்டன. இதற்காக, வெளியில் இருந்து ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டனர். இவர்களுக்கான ஊதியத்தை, அந்தந்த கோவில் நிர்வாகங்களே நிர்ணயித்து வழங்கலாம் என, அறிவுறுத்தப்பட்டது. ஆனால், ஊதியம் நிர்ணயிப்பதில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக, பல மாதங்களாக ஆசிரியர்களுக்கு ஊதியம் கிடைக்கவில்லை; இதனால், ஆசிரியர்களின் வருகை படிப்படியாக நின்றுவிட்டது. இதையடுத்து இந்த பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடைபெறாமல் தடைபட்டது. இந்நிலையில், தற்போது, இந்த பயிற்சி வகுப்புகளை மீண்டும் நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து, அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.