பதிவு செய்த நாள்
21
அக்
2014
11:10
தேனி : தேனி மாவட்டத்தில் எவ்வித அடிப்படை வசதிகளும் செய்யப்படாததால் ஐயப்ப பக்தர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். சபரிமலை ஐயப்பன்கோயில் செல்லும் பக்தர்களில் பல லட்சம் பேர் தேனி மாவட்டம் வழியாக செல்கின்றனர். ஆண்டுக்கு 25 லட்சம் பேர் தேனி மாவட்டத்தை கடந்து செல்வதாக ஐயப்ப பக்தர்கள் சேவா குழு கணக்கீடு செய்துள்ளது. தேனி மாவட்டத்திற்குள் வந்ததும் பக்தர்கள் வைகை அணை, கும்பக்கரை அருவி, வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில், உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோயில், சின்னமனூர் பூலாநந்தீஸ்வரர் கோயில், லோயர்கேம்ப் பகவதியம்மன் கோயில் பெரியாறு(இளையராஜா பங்களா அருகே), சுருளி அருவிக்கு செல்கின்றனர். வைகை அணை தவிர மற்ற இடங்களில் பக்தர்கள் தங்கி குளித்து உடைமாற்றி வழிபாடு செய்கின்றனர். ஆனால், இங்கெல்லாம் பக்தர்கள் தங்குவதற்கோ, கழிப்பிடம் செல்வதற்கோ, உடை மாற்றுவதற்கோ, உணவு உண்பதற்கோ எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. வரும் பக்தர்கள் ஆண்கள் என்பதால் வெட்ட வெளியில் இயற்கை உபாதைகளை கழித்து விட்டு குளித்து உடை மாற்றுகின்றனர். இதுவரை இது தொடர்பாக பிரச்னை ஏதும் ஏற்படவில்லை. அதேபோல் ஐயப்ப பக்தர்களுக்கு இங்குள்ள கடைகளில் தரமற்ற உணவுகளே வழங்கப்படுகின்றன. உடல் உபாதைகள் ஏற்படும் பக்தர்களுக்கு சிகிச்சை அளிக்க கூட இங்கு வசதிகள் செய்யப்படவில்லை. தேனி மாவட்டத்தை சேர்ந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, "தேனி மாவட்டத்தை கடந்து செல்லும் பக்தர்களில் 70 சதவீதம் பேர் சொந்த வாகனத்தில் செல்கின்றனர். 2 சதவீதம் பேர் மட்டுமே நடந்து செல்கின்றனர். மற்ற பக்தர்கள் மாவட்டத்திற்குள் இயக்கப்படும் வாகனங்களை பயன்படுத்துகின்றனர். தங்குவதற்கும், கழிப்பிடம் போன்ற வசதிகளும் குறைவாகவே உள்ளன. இந்த வசதிகளை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.