பதிவு செய்த நாள்
23
அக்
2014
12:10
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா, சுவாமிகளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் நாளை(அக்.,24) தொடங்குகிறது.
காலை 6 மணிக்கு கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளியுள்ள அனுக்ஞை விநாயகர் முன்பு பூஜைகள் முடிந்து, விசாக கொறடு மண்டபத்தில் யாகசாலை பூஜைகள் நடக்கும். உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு சிவாச்சார்யார்களால் காப்பு கட்டப்பட்டு, உற்சவர் நம்பியார் சிவாச்சாரியாருக்கும், விரதம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கும் காலை 10 மணிக்கு காப்பு கட்டப்படும்.அக். 30 வரை நடக்கும் திருவிழாவில் தினமும் இரவு 7 மணிக்கு தந்தத்தொட்டி விடையாத்தி சப்பரத்தில் சுவாமி எழுந்தருளி கோயில் திருவாட்சி மண்டபத்தை ஆறு முறை வலம் சென்று அருள்பாலிப்பார். தினமும் காலையில் யாகசாலை பூஜைகளும், காலை 10 மணிக்கும், மாலை 5 மணிக்கும் சண்முகார்ச்சனையும் நடக்கும்.
சூரசம்ஹாரம்: திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக அக்., 28 மாலை வேல் வாங்குதல், அக்., 29ல் சூரசம்ஹாரம், அக்., 30 காலையில் தேரோட்டம், பகல் 3 மணிக்கு மூலவருக்கு தைல புண்ணியாகவாசனமாகி, பாவாடை நைவேதன தரிசனம் நடக்கிறது. இரவு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை தங்க மயில் வாகனத்தில் வீதி உலா நிகழ்ச்சி நடக்கும்.