பதிவு செய்த நாள்
23
அக்
2014
01:10
பொள்ளாச்சி : பொள்ளாச்சியில், பழங்கால வரலாற்றைச்சுமந்து, ஆயிரம் ஆண்டுகாலமாக பழமை மாறாத கோவில் உள்ளது. வரலாற்றை பறைச்சாற்ற அங்குள்ள கல்வெட்டுகளும், சிற்ப வேலைப்பாடுகளுமே சாட்சியளிக்கிறது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கியது. பொள்ளாச்சி என்ற பெயருக்கே பல்வேறு சிறப்புகள் கூறப்படுகின்றன. பொருள் புழக்கம் அதிகமாக இருந்ததால், பொருள் ஆட்சி என்ற பெயர் ஏற்பட்டதாகவும்; அது நாளடைவில், பொருளாட்சி என மருவி விட்டதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது.பொள்ளாச்சி பாலக்காட்டுக் கணவாய்க்குநேர் எதிரில் உள்ளது. எனவே, இங்கு மேற்கு கடலிலிருந்து வீசும் காற்றுடன் மழையும் பெய்கிறது. இவ்வாறு நீர்வளம் மிகுதியாக இருந்தமையால் மரஞ்செடிகள் செழித்து சோலைகளாக விளங்கின. சோலைகளை பொழில்கள் என்று சொல்லப்படும். பொழில்களுக்கு இடையில் சிற்றுார் ஏற்பட்டது. சிற்றுார்களை வாய்ச்சி என்று வழங்குவது வழக்கம்.
பொழில்களுக்கு இடையில் ஏற்பட்ட சிற்றுாரை பொழில் வாய்ச்சி என்று அழைத்தனர். மழை இல்லாத காலத்தில் கிணறுகளின்றும், நீர் இறைத்து விவசாயம் செய்தனர். எனவே, இது இறைச்சில் பொழில்வாய்ச்சி எனப்பட்டது. எறிச்சல் பொழில்வாய்ச்சி என வழங்கப்பட்டது நாளடைவில், பொள்ளாச்சியாக உருமாறியது என கல்வெட்டுகளில் காணப்படுகிறது. இவ்வாறு பல்வேறு புகழ் பெற்ற பொள்ளாச்சி பகுதியில், ஆயிரம் ஆண்டுகாலம் கடந்து பழமை மாறாமல் காட்சியளிக்கும் கோவில், இளைய தலைமுறைக்கு வரலாற்றுச்சுவடாக உள்ளது. பொள்ளாச்சி நகரப்பகுதியில் அமைந்துள்ளது சுப்பிரமணிய சுவாமி கோவில். இங்கு ஐந்து கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.
கருவறையின் தெற்குச் சுவரின் கீழ் பகுதியில் உள்ள கல்வெட்டில், இறைச்சில் பொழில் வாய்ச்சியில் உள்ள கோவில் என்றும், கொங்கு பாண்டிய சுந்தர பாண்டிய தேவர் கோவிலுக்கு கல் நிலவு பரிசளித்தார் என்றும் காணப்படுகின்றன. இதே மன்னனின 11ம் ஆட்சி ஆண்டை சார்ந்த மற்றொரு கல்வெட்டு கருவறையின் வடக்குச்சுவரில் சிதைந்த நிலையில் உள்ளது. இந்த மன்னன் கி.பி.,1285 முதல் 1300 வரை ஆட்சி புரிந்தவரும், இவன் கோவிலுக்கு கல்லான நிலவு நிபந்தமான அளித்தான் என்பதினின்றும், கொங்கு சோழபர கேசரிவர்மன் என்ற திரிபுவன சக்கரவர்த்தி விக்கிரம சோழனின் 22ம் ஆட்சி ஆண்டை சார்ந்த கல்வெட்டு வலப்பக்கத்தில் சிதைந்து காணப்படுவதாகவும் கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சியின் முடிவில் தெரிவித்துள்ளனர். இதன்படி பார்த்தால், ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் பழமை மாறாமல் காட்சியளிக்கிறது இக்கோவில்.
சிவன் கோவில் : திருவக்கதீசுவர முடையார் கோவில் என்று கல்வெட்டு குறிப்பிடுவதினின்றும் இது முற்காலத்தில், சிவன் கோவிலாக இருந்திருக்க வேண்டும் என தெரிய வருகிறது. இது வாழ்க்கையில் தகப்பனுக்குபின் பிள்ளை தன் தகப்பனது தொழில் வீடு ஆகியவற்றின் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வது போன்று, சிவபெருமானின் கோவில் அவன் மகனாகிய முருகனுக்கு சொந்தமாகி விட்டது.தேவாரப்பாடல்களை பெற்ற தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த வைத்தீசுவரன் கோவில், சிக்கல் ஆகிய தலங்களில் உள்ள கோவில்கள் சிவன் கோவில்களாகும். இருப்பினும் முத்துக்குமாரசாமி, சிங்கார வேலன் என்ற பெயர்களில் முருகன் அங்குள்ள மூலவரைக்காட்டிலும் அதிக புகழை அடைந்துள்ளான். எனினும் அவை சிவாலயங்களாகவே வழங்கப்படுகின்றன. ஆனால், இங்குள்ள கோவில் முருகனது பெயரால் அழைக்கப்படுகிறது.
கோவில் அமைப்பு : கிழக்கு நோக்கி அமைந்துள்ள இந்த கோவில் ஒரு பிரகாரத்தை கொண்டது. சிவன் சந்நிதிக்கு முன் ராசகோபுரமும், முருகன் சந்நதிக்கு முன் சிறிய அளவிலான முகப்பும் உள்ளன. கோவில் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், நவக்கிரக மண்டபம், சோபன மண்டபம், சிவன், அன்னை ஆகியோரின் சந்நதிகள், திருக்கல்யாண மண்டபம் ஆகியவற்றை கொண்டது. கருவறையில், முருகப்பெருமான் மயில் மீது ஒரு தலை நான்கு கைகளுடன் சுகாசனத்தில் உட்கார்ந்த கோலத்தில் காணப்படுகிறான். பின்வல மற்றும் இடக்கைகளில் கத்திரி முத்திரையில் நிரலே சக்தியும், வச்சிரமும் அமைக்கப்பட்டுள்ளன. முன்வலக்கை அபயமுத்திரையிலும், முன் இடக்கை வரதமுத்திரையிலும் உருவாக்கப்பட்டுள்ளன. திருவாசி, மயில் மற்றும் முருகன் ஒரே கல்லில் ஆனவையாகும். மயில் தலை இடப்புறம் உள்ளதால், இதுதேவமயில் என அழைக்கப்படுகிறது.
கலை சிற்பம் : முருகனது கருவறையையொட்டி, தென்புறத்தில் சுந்தரேசுவரர் மற்றும் மீனாட்சி அம்மன் ஆகியோரின் சந்நதிகள் உள்ளன. இவற்றிற்கு முன்னால் 24 துாண்கள் கொண்ட திருமண மண்டபம் உள்ளது. சிவன் சந்நதிக்கு நேர் மேலே விதானத்தில் ஒரே கல்லில் நடுவில் தாமரை 12 ராசிகளுடன் கூடிய சதுரமான அமைப்புள்ளது. அதனையொட்டி, ஒரே கல்லில் யாளியின் வாயினின்றும் மூன்று வளையங்கள் ஒன்றில் ஒன்றாக பிணைத்து தொங்குகின்றன. அம்மன் சந்நதிக்கு நேர் எதிரில் மேலே விதானத்தில் தாமரை மலர் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இவை பழங்கால கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
1904ம் ஆண்டு திருக்கல்யாணம் மண்டபம், சிவன், அன்னை சந்நதி, கன்னி விநாயகர் சந்நதி ஆகிய பல திருப்பணிகள் நடைபெற்றன. 1947, 1983, 2001 ஆம் ஆண்டுகளில், கும்பாபிேஷக விழா நடந்தது. இக்கோவிலில், எல்லா மாதங்களிலும் திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. அதில் முக்கியமானது சூரசம்ஹார விழா மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இவ்வாறு பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கிய இக்கோவில், ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் இன்னும், இளைஞர்களுக்கு வரலாற்றை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது.