பதிவு செய்த நாள்
23
அக்
2014
01:10
ஆனைமலை : ஆனைமலை அருகே, பல தலைமுறைகளாக இங்குள்ள கிராம மக்கள், நடுகல்லை தங்கள் முன்னோர் நினைவாக பாதுகாத்தும், பராமரித்தும் வணங்கி வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில், பொள்ளாச்சி தாலுகாவின் ஆனைமலை பகுதியில், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், பூவலப்பருத்தி கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதியின் வழியாகத்தான் சோழர் காலத்தில் புகழ்பெற்று விளங்கிய, பெருவழிகளில் ஒன்றான, வீரநாராயணன் பெருவழி அமைந்திருந்தது. இங்கு சோழர்களின் பிரதிநிதிகளாக ஆட்சி செய்த பாளையக்காரர்கள், ஆற்றுப்பகுதிகளில் காடுகளை அழித்து விளைநிலங்களை உருவாக்கி மக்களை குடியேற்றினர்.
செல்வச் செழிப்பின் குறியீடு: வேளாண்மை சார்ந்த, கால்நடை வளர்ப்பு தழைத்தோங்கிய, அன்றைய கால கட்டத்தில், கால்நடைகள் ஒரு நாட்டின் செல்வ வளத்தின் குறியீடாக கருதப்பட்டது. அக்கால போர் முறைகளில், ஆநிரை (பசுக்கூட்டம்) கவர்தல், காத்தல் ஆகியவையும் அடங்கியுள்ளன. கால்நடை பாதுகாப்புக்கு என, தனிப்படை இருந்ததாகவும், மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளை பாதுகாக்க, ஊர்க்காவல் படைவீரன், பண்டுதகாரர்கள் (மருத்துவர், மேய்ப்பாளர் மற்றும் அவர்களுக்கு உணவு தயாரிக்கும் பெண்) உள்ளடங்கிய, தனிப்பிரிவே இயங்கி வந்துள்ளது.
இதுகுறித்து இப்பகுதியை சேர்ந்த, ராமராஜ் கூறுகையில், அக்காலத்தில் கிராம மக்களையும், கால்நடைகளையும் வன விலங்குகளிடமிருந்து காக்க, நடந்த சண்டையில், வீரமரணம் அடைந்த, படை வீரராக பணி புரிந்த, எங்கள் முன்னோர்களின் நினைவாக, நடுகல் வழிபாட்டினை மேற்கொண்டு வருகிறோம். எங்கள் தலைமுறையின் நல்வாழ்வுக்காக, இதனை செய்கிறோம், என்றார்.
கோவை பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி கல்வெட்டியல் பொறுப்பாசிரியர் ரவி கூறியதாவது: இவ்வகையான புலிக்குத்தி கற்கள் புடைப்பு சிற்பம் வகையினை சார்ந்தது. புலியிடமிருந்து, மக்களையும் கால்நடைகளையும் காக்க நடந்த சண்டையில், புலியினைக்கொன்று, தன் வீரத்தினை வெளிப்படுத்தி, வீரமரணம் எய்திய, படைவீரர்களின் நினைவாக இக்கல் அமைக்கப்பட்டுள்ளது.இந்த கல்லில் காணப்படும், கலைநயம் மிக்க உருவ அமைப்புகள், கைகளில் அணிந்துள்ள ஆபரணங்கள், அவர்கள் சமூகத்தில் உயர்ந்த நிலை பெற்றுள்ளதை காட்டுகிறது. புலியின் வால் மேல் நோக்கி இருப்பதும், வீரன் மண்டியிட்டு உள்ளதும், ஆக்ரோஷமாக சண்டையிட்டதையும் காட்டுகிறது. போர்வீரனின் குடுமி நாயக்கர் காலமான, 16ம் நூற்றாண்டை காட்டுகிறது. வீரர்களின் அருகில் கம்புகள் உள்ளது. அவை காவல் வீரர்கள் என்பதை உணர்த்துகிறது. இவை, சோழர்கள் கால நினைவு சின்னங்கள்.இவ்வாறு ரவி கூறி னார்.