பதிவு செய்த நாள்
23
அக்
2014
02:10
சேலம்: சேலம், செவ்வாய்ப்பேட்டை, ஸ்ரீஹரிஹர தேவாலயத்தில், 7,001 லட்டுக்களால் தயார் செய்யப்பட்டு, அன்னபூரணிக்கு சிறப்பு பூஜை நடந்தது. ஆண்டு தோறும் காசியில், தீபாவளி தினத்தில், லட்டு தேர் செய்யப்பட்டு அதில், சிறப்பு பூஜை நடைபெறும், இந்த தரிசனத்துக்காக நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் காசிக்கு படையேடுப்பர். காசியில் நடக்கும் லட்டு தேர், அன்னபூரணி தரிசனத்தை சேலத்தில் பக்தர்கள் கண்டு களிக்கும் வகையில், சேலம் ஸ்ரீ சாஸ்தா சேவா சமிதி நித்ய அன்னதான டிரஸ்ட் ஏற்பாடு செய்தது.
தீபாவளி பண்டிகையை ஒட்டி நேற்று, சேலம், செவ்வாய்ப்பேட்டை, ஸ்ரீஹரிஹர தேவாலயத்தில், ஸ்ரீ சாஸ்தா சேவா சமிதி நித்ய அன்னதான டிரஸ்டில், 7,001 லட்டுக்களால் தயார் செய்யப்பட்ட தேரில், அன்னபூரணி எழுந்தருளினார். தேரில் சிகப்பு, மஞ்சள், பச்சை நிறங்களில் லட்டுக்கள் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அதைத் தொடர்ந்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில், திரளாக பக்தர்கள் வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை, ஸ்ரீ சாஸ்தா சேவா சமிதி நித்ய அன்னதான டிரஸ்டின் நிர்வாகிகள் மோகன்குமார், பத்ரிநாராயணன், தர்மகர்த்தா நாகராஜ் அய்யர் ஆகியோர் செய்து இருந்தனர்.
இதில், கலந்து கொண்ட பக்தர்களுக்கு, லட்டுக்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது. மேலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இக்கோவிலில் எழுந்தருளியுள்ள ஹரிஹரர், காலபைரவர், சனிஸ்வரர், ஆதிசங்கர், சக்கரத்தாழ்வார், ராமன் சீதை, வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் ஆகியோர் தங்க கவசத்தில் அருள் பாலித்தனர்.இது குறித்து கோவில் தர்மகர்த்தா நாகராஜ் அய்யர் கூறியதாவது:
அன்னம் பாலிக்கும் அன்னபூரணியை தீபாவளி நாளில், லட்டு அலங்கராத்தில் வாழ்வில் எல்லா நலமும், குறிப்பாக உணவு தங்கு தடையின்றி கிடைப்பதோடு, உடல் நலம் சிறப்படையும் என்பது நம்பிக்கை. தீபாவளி நாளில் அன்னபூரணிக்கு காசியில் மட்டும் சிறப்பு லட்டு தேரில் பூஜை நடக்கும். இந்த சிறப்பு வழிபாட்டை சேலம் பக்தர்களும் கண்டு கழித்து, அருளாசி பெறும் வகையில், லட்டு தேரில் அன்னபூரணி சிறப்பு வழிபாடுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு வழிபாட்டில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர், என்றார்.