பதிவு செய்த நாள்
24
அக்
2014
01:10
வேலூர் :பரம்பரை பரம்பரையாக தீபாவளியை, ஏலகிரியை சேர்ந்த பொதுமக்கள் கொண்டாடாமல் தவிர்த்து வருகின்றனர்.வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அருகே ஏலகிரி மலை, கடல் மட்டத்தில் இருந்து, 1,410 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்த மலையில், நிலாவூர், அத்னாவூர், மங்கலம், கொட்டையூர், என, 14 கிராமங்கள் உள்ளது. 14 கொண்டை ஊசி வளைவுகளை கடந்துதான், ஏலகிரி மலைக்கு செல்ல வேண்டும். நாடு முழுவதும் நேற்று முன்தினம், தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. நேற்று, தீபாவளி நோன்பு எடுத்தனர். ஆனால், ஏலகிரி மலையில், தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவில்லை. இதுகுறித்து, ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் அச்சுதன் கூறுகையில்,""விவசாயத்தை முழுவதும் நம்பி வாழும் நாங்கள், தை பொங்கல் பண்டிகையைத்தான் கொண்டாடுகிறோம். இங்கு பரம்பரையாக யாரும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதில்லை, என்றார்.ஏலகிரி மலை தங்கும் விடுதி சங்க தலைவர் குமார் கூறியதாவது:இந்த மலைப் பகுதியில் தீபாவளியை யாரும் கொண்டாடுவதில்லை. தீபாவளி என்று இங்குள்ள சிறுவர்களை கேட்டால், அவர்களுக்கு என்னவென்றே தெரியாது. பாடப்புத்தகத்தில் வேண்டுமானால் படித்திருக்கலாம். இந்த மலையில் வாழும் அனைத்து மக்களும் விவசாயத்தை நம்பி வாழ்பவர்கள்.மா, பலா, வாழை விளைவிக்கின்றனர். ஆடு, மாடுகளை வளர்க்கின்றனர். 50 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு யாரும் தீபாவளி கொண்டாடவில்லை. எந்த பலகாரங்களையும், அன்று செய்ய மாட்டார்கள். புதுமணத் தம்பதிகள் தலை தீபாவளியை கொண்டாட மாட்டார்கள். வெளியூர்களில் திருமணம் செய்து கொடுத்த பெண்ணுக்கு தலை தீபாவளிக்காக சீர் வரிசை பொருட்களை, கொண்டு போய் கொடுத்ததில்லை. பொங்கல் பண்டிகையை தான் கொண்டாடி வருகிறோம், என்றார்.