பதிவு செய்த நாள்
24
அக்
2014
01:10
நாமக்கல் :கொல்லிமலை அடுத்த வளப்பூர் நாடு வள்ளலார் கோட்டத்தில், ஆயிரம் ஆண்டு பழமையான மா மரம் பராமரிக்கப்பட்டு வருவதால், சுற்றுலா பயணிகள் மற்றும் வள்ளலார் பக்தர்கள், அதிகளவில் வந்து செல்கின்றனர். கொல்லிமலையானது அடர்ந்த வனப்பகுதியாக இல்லாமல் இருப்பதால், நாளுக்கு நாள், மக்கள் நடமாட்டம் அதிகரித்து மற்றும் மலைவாழ் வசிப்பிடமாக மாறி வருகிறது. இதனால், இயற்கையும், மன அமைதியை தேடி, பல்வேறு மத அமைப்பை சேர்ந்தவர்கள், மலைப்பகுதி மக்களிடம் இருந்து நிலத்தை விலைக்கோ, ஒப்பந்தத்திற்கோ பெற்று, அமைதியான வாழ்க்கை முறையை பின்பற்றி வருகின்றனர்.கொல்லிமலையில், சில இடங்களில், 24 மணி நேரமும், இயற்கையான சீதோஷ்ண நிலை இருப்பதால், சித்தர் மடங்கள், வள்ளலார் கோட்டம், ரிஷி மடம் என்ற பெயரில், பத்துக்கும் மேற்பட்ட மடங்களில், சன்னியாசிகள் வசித்து வருகின்றனர். இங்குள்ள இயற்கையான சூழலுடன், மலைப்பகுதியில் கிடைக்கும் உணவை சாப்பிட்டு காலத்தை ஓட்டி வருகின்றனர்.இந்நிலையில், வளப்பூர்நாடு என்ற பகுதியில், வள்ளலார் கோட்டம் உள்ளது. இதன் கட்டுப்பாட்டில், ஆயிரம் ஆண்டு பழமையான, பத்து மீட்டர் சுற்றளவில், 20 மீட்டர் உயரத்தில், மா மரம் உள்ளது. இந்த மரத்தின் அடியில், ஈஸ்வரன் சிலை அமைக்கப்பட்டு, அணையா விளக்கு அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் எரிந்து கொண்டிருக்கிறது. இவ்விடத்தை, வள்ளலார் கோட்ட நிர்வாகிகள் பராமரித்து வருகின்றனர்.கோட்டத்தின் பராமரிப்பாளர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது:கரூர் மாவட்டத்தை சேர்ந்த குமரன் என்பர், தனது ஆன்மிக ஈடுபாட்டால், கொல்லிமலையில் வள்ளலார் கோட்டம் அமைத்துள்ளார். இங்கு, ஆயிரம் ஆண்டு பழமையான மா மரம் உள்ளது. இந்த மரத்தில், ஒவ்வொரு ஆண்டும், மற்ற மரங்களில் பூக்கள் பூப்பதுபோல், இதிலும் பூக்கும். ஆனால், பழங்கள் தராது.பாரதிதாசன் பல்கலை தாவரவியல் பேராசிரியர் ஸ்ரீதரன் என்பவர், பழமையான மா மரத்தை பற்றி ஆய்வு செய்துவிட்டு சென்றார். நாட்டில், இவ்வளது வயதுடைய மா மரம் கிடையாது என தெரிவித்தார். மேலும், மரத்தின் நடுப்பகுதியில், மிகப்பெரிய, "பொந்து நீண்டகாலமாக இருக்கிறது.அதில், எவ்வித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக, பொந்து பகுதிக்குள் சாம்பல் போட்டு, பூச்சிகள் அரிக்காமல் பார்த்துக் கொள்கிறோம். வள்ளலாரின் கொள்கையை பின்பற்றி, இந்த கோட்டம் செயல்படுவதால், விழாக் காலங்களில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.