பதிவு செய்த நாள்
30
அக்
2014
02:10
பொள்ளாச்சி : பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹாரத்திருவிழா நேற்று நடந்தது. பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹாரத்திருவிழா கடந்த 24ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தினசரி நான்கு கால அபிேஷக ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து, நேற்றுமுன்தினம் மாலை 6:00 மணிக்கு வேல்வாங்கும் உற்சவமும்; நேற்று மாலை 3:00 மணி முதல் பேரூர் ஆதீனம் இளைய பட்டம் மருதாசல அடிகள் முன்னிலையில், சூரசம்ஹார நிகழ்ச்சியும் நடந்தது. சுப்ரமணிய சுவாமி கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு கிழக்கு எஸ்.எஸ்., கோவில் வீதி வழியாக சென்றது.
சத்திரம் வீதி, தெப்பக்குளம் வீதி சந்திப்பு பகுதியில், தாரகன் வதையும்; தெப்பக்குளம் வீதியும், வெங்கட்ரமணன் வீதியும் சந்திப்பு பகுதியில் இரண்டாவது சூரன் சிங்கமுகன் வதையும், வெங்கட்ரமணன் வீதியும், ராஜாமில் ரோடும் சந்திப்பு பகுதியில், மூன்றாவது சூரன் பானுகோபன் வதையும் நடந்தது. பின், உடுமலை ரோடு வழியாக சென்று தேர்நிலையம் பகுதியில், சூரபத்மன் வதை செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதையடுத்து கடந்த ஆறு நாட்களாக சஷ்டி விரதம் மேற்கொண்டு வந்த பக்தர்கள், பழங்கள் உண்டு விரதத்தை முடித்தனர். தொடர்ந்து இன்று (30ம் தேதி) காலை 10:00 மணிக்கு மகா அபிேஷகம், மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், 31ம் தேதி மாலை 6:00 மணிக்கு திரு ஊஞ்சல் உற்சவ பூர்த்தி நிகழ்ச்சியும் நடக்கிறது.