பதிவு செய்த நாள்
30
அக்
2014
03:10
திருச்சி: திருச்சி, குமார வயலூர் முத்துக்குமார ஸ்வாமி கோவிலில், கந்தசஷ்டி விழாவையொட்டி, நேற்று காலை, சூரசம்ஹாரத்துக்கு வேல் வழங்கும் நிகழ்ச்சியும், மாலையில், சூரசம்ஹாரமும் நடந்தது. தமிழகத்தில், ஆறுபடை வீடுகளுக்கு அடுத்தபடியாக, பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில், திருச்சியை அடுத்து குமார வயலூரில் உள்ள முத்துக்குமார ஸ்வாமி கோவிலும் ஒன்று.
இக்கோவிலில், இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா, கடந்த, 24ம் தேதி காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. அன்று முதல், தினமும் காலையில் லட்சார்ச்சனை, ஷண்முகார்ச்சனை, இரவு சிறப்பு வாகனங்களில் சிங்காரவேலர் வீதியுலா நடந்தது. கடந்த, 27ம் தேதி, முருகன் அன்னவாகனத்தில் எழுந்தருளி, யானை முக சூரனுக்கு முக்தியளித்தார். நேற்று முன்தினம், வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி, சிங்கமுக சூரனை வதம் செய்தார். விழாவில், முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், நேற்று இரவு நடந்தது. சூரனை சம்ஹாரம் செய்வதற்காக, நேற்று காலை, 10 மணிக்கு, வயலூர் கோவில் ஆதிநாயகி அம்மன் அலங்கரிக்கப்பட்ட பல்லாக்கில், சக்திவேலுடன் கோவில் முன் எழுந்தருளினார். தொடர்ந்து, உற்சவர் முருகன் பல்லாக்கில், கோவிலை வலம் வந்து, ஆதி நாயகி அம்மனிடம், வேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. சக்திவேலை பெற்றுக்கொண்ட முருகப்பெருமான், இரவு, 7.30 மணிக்கு, ஆட்டுக்கடா வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து, அரோகரா கோஷம் முழங்க, சூரபத்மனை வதம் செய்து, மோட்சம் அளித்தார். நிகழ்ச்சியில், திருச்சி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, ஸ்வாமி தரிசனம் செய்தனர். கந்த சஷ்டி விழாவில், சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை முன்னிட்டு, அரசு போக்குவரத்து கழகம் சார்பில், திருச்சியிலிருந்து, வயலூருக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டது.