பதிவு செய்த நாள்
05
நவ
2014
01:11
கும்பகோணம் : கும்பகோணம், மகாமக குளக்கரையில் உள்ள தீர்த்தவாரி மண்டபத்திலிருந்து இடிந்து விழுந்த கொடுங்கை (சன்ஷேடு) சீரமைக்கும் பணி நடக்கிறது.கும்பகோணம் மகாமக குளக்கரையில் சோடசலிங்கம் எனப்படும், 16 வகையான லிங்கங்களுக்கு கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் ஆண்டுதோறும் ஐப்பசி மாத பவுர்ணமி அன்று அன்னாபிஷேகம் நடைபெறும். மேலும், மகாமக குளத்தின் வடக்கு பகுதியில் உள்ள கரையில், 16 கால் மண்டபம் என்று அழைக்கப்படும் தீர்த்தவாரி மண்டபம் உள்ளது.இந்த மண்டபம் கருங்கல்லாலும், சுண்ணாம்பு கலவையாலும் கட்டப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தின் மேற்கூரையில், நான்கு ஓரங்களிலும் கொடுங்கை எனப்படும் சன்ஷேடு அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்த மழை காரணமாக, தீர்த்தவாரி மண்டபத்தின் வடகிழக்கு முலையில் உள்ள சன்ஷேடின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.இது குறித்து, ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் மாரியப்பன் கூறியதாவது: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஏற்கனவே உத்தரவிட்டபடி, கும்பகோணம் மகாமக குளத்தின் கரைகளில் உள்ள, 16 சோடச மகாலிங்க ஸ்வாமி கோவில்களின் சன்னதிகள் சீரமைக்கப்பட உள்ளது. அதற்காக, 19.38 லட்சத்தை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. தற்போது, தீர்த்தவாரி மண்டபத்தில் ஏற்பட்டுள்ள இடிபாட்டை பழமை மாறாது உடனடியாக சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. செப்பனிடும் பணி விரைவில் முடிக்கப்படும்.மேலும், கும்பகோணம் நடன கோபாலன் தெருவில் அமைந்துள்ள ஜெயவீர ஆஞ்சநேயர் கோவில், ஒரு தனிப்பட்ட சமுதாயத்தின் கட்டுப்பாட்டிலும், பராமரிப்பிலும் உள்ள ஒரு பொது கோவிலாகும். இந்த கோவில் முன் இருந்த மண்டபமும் மழை காரணமாக இடிந்துள்ளது. இம்மண்டபத்தை சீரமைக்க, அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். வரும், 2016ம் ஆண்டு கும்பகோணத்தில் நடைபெற உள்ள மகாமகத்தை முன்னிட்டு, இப்பகுதியில் உள்ள, 69 கோவில்கள், 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செப்பனிட்டு பாதுகாக்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.