பதிவு செய்த நாள்
07
நவ
2014
11:11
திருவண்ணாமலை: ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், ஏராளமான பக்தர்கள், கிரிவலம் சென்றனர்.அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், மாதந்தோறும் பவுர்ணமியன்று, பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, கிரிவலம் செல்ல உகந்தநேரம், நேற்று அதிகாலை, 5.31 மணி முதல் இன்று காலை, 4.28 மணி வரை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலை, 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் தீபாரதனைகள் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்தனர். கிரிவல பாதையில், ஆங்காங்கே பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது. பவுர்ணமியொட்டி, அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம், ஆகியவை நேற்று ரத்து செய்யப்பட்டன. பக்தர்களின் வசதிக்காக, ஏராளமான சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. மாலை, 5 மணி முதல், ஒன்பது இடங்களில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் செயல்படுத்தப்பட்டது. மேலும், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.