பதிவு செய்த நாள்
11
நவ
2014
11:11
திண்டுக்கல்: திருக்கார்த்திகை பண்டிகையை முன்னிட்டு பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்புவதற்காக திண்டுக்கல்லில் பல லட்சம் அகல் விளக்குகள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. திண்டுக்கல் வேடப்பட்டி, நல்லாம்பட்டியில் 60 க்கும் மேற்பட்டோர் களிமண்ணில் விளக்குகள் தயாரிக்கும் தொழில் செய்து வருகின்றனர். கார்த்திகை அகல்விளக்கு, குத்துவிளக்கு, அன்னவிளக்கு, தேங்காய், லெட்சுமி, விநாயகர், இலை, மண்டபம் உள்ளிட்ட 50 வடிவங்களில் விளக்குகள் தயாரிக்கப்படுகின்றன. சென்னை, கோவை, திருச்சி, மதுரை மற்றும் கேரளாவிற்கு தேவையான விளக்குகள் இங்கிருந்து அனுப்பி வைக்கப்படுகின்றன. ஒரு விளக்கு 50 காசு முதல் ரூ.150 வரை விற்கப்படுகிறது. டிச.,5 ல் திருக்கார்த்திகை என்பதால் அகல் விளக்குகளுக்கு ஆர்டர்கள் குவிந்துள்ளன. இதனால் இரவு, பகல் பாராமல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். வேடப்பட்டியில் விளக்கு தயாரிக்கும் அய்யனார் கூறியதாவது: கேரளாவுக்கு மட்டும் 3 லட்சம் அகல் விளக்குகளுக்கு ’ஆர்டர்’ கிடைத்துள்ளது. மாவட்ட வியாபாரிகளிடம் இருந்து’ஆர்டர்’கள் வந்தவண்ணம் உள்ளது. திருக்கார்த்திகைக்கு மட்டும் 10 லட்சம் அகல்விளக்குகள் விற்பனையாகும், என்றார்.