பதிவு செய்த நாள்
11
நவ
2014
11:11
திருப்பூர் : திருப்பூர் அருகே உள்ள மங்கலம் அக்ரஹாரபுத்தூரில், நூற்றாண்டு பழமை வாய்ந்த செல்வ விநாயகர் கோவில் உள்ளது. சிதிலமடைந்திருந்த இக்கோவில், பக்தர்களின் முயற்சியாலும், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் வழிகாட்டுதலின் படியும், புனரமைக்கப்பட்டது. கோவில் திருப்பணி நிறைவடைந்து, நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. அங்குள்ள மாரியம்மன், பத்ரகாளியம்மன் கோவில்களுக்கும், கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதற்கான யாகசாலை பூஜைகள், கடந்த 8ம் தேதி துவங்கின. நான்கு கால யாகசாலை பூஜைகளும், அதை தொடர்ந்து தீர்த்த கலசம், முளைப்பாரி ஊர்வலமும் நடந்தது. நேற்று காலை 6.30 மணிக்கு, செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. விமானம் மற்றும் நூற்றாண்டு பழமை வாய்ந்த செல்வ விநாயகருக்கு, கும்பநீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. காலை 9.40 மணிக்கு பத்ரகாளியம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம், கோலாகமாக நடந்தது. அறுபடை முருக பக்தர் பேரவை அன்னதான குழு சார்பில் அன்னதானம் நடந்தது. அக்ரஹாரபுத்தூர், சின்னப்புத்தூர், வேட்டுவபாளையம் மற்றும் பொங்கேகவுண்டன்புதூரை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர். மண்டல பூஜை, இன்று துவங்குகிறது.