கீழக்கரை : திருப்புல்லாணி அருகே உள்ள கோரைக்கூட்டம் கிராமத்தின் ஆற்றங்கரை அருகே உள்ளது மகான் பட்டாணி அப்பா ஒலியுல்லா தர்கா. இங்கு 12 வது ஆண்டு சந்தனக்கூடு எனும் உரூஸ் மத நல்லிணக்கத்திற்கான திருவிழா நடந்தது. கடந்த அக்.,31 ல் கொடியேற்றம் செய்யப்பட்டது. பின்னர் நேற்று மாலை 4 மணியளவில் ஜும்மா பள்ளிவாசலில் இமாம் மவுலீது ஒதி, உலகநன்மைக்காக துஆ செய்தார். அதன்பின், கீழவலசை கிராமம் சென்று அங்கிருந்து மேளதாளங்கள் முழங்க 5 குதிரைகள் பவனி வர, வீடுகளின் முன்பாக நேர்த்திக்கடன் உண்டியல் காணிக்கை சேகரிக்கும் நிகழ்ச்சி நடந்தது. நாளை அதிகாலை 4:00 மணிக்கு மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூட்டை ஊர்வலமாக எடுத்து வந்து மகானின் தர்காவில் சந்தனம்பூசும் நிகழ்ச்சி நடக்கிறது.விழாக்குழுத்தலைவர் சேட் நூருல் ஹக், ஊராட்சித்தலைவர் உசேன், பொருளாளர் அபுசாலி, காஞ்சிரங்குடி சந்தனக்கூடு தலைவர் அன்வர்தீன் உட்பட பலர் பங்கேற்றனர்.