பதிவு செய்த நாள்
17
நவ
2014
12:11
திருப்பூர் : திருப்பூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவிலில், புதிய விக்ரகங்களுக்கு தான்ய வாசம் செய்யும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. திருப்பூர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம், வரும் டிச., 1ல் நடக்கிறது. சுற்றுப்பிரகாரத்தில் ஸ்ரீசக்கரத்தாழ்வார், ஸ்ரீலட்சுமி நரசிம்மர், ஸ்ரீஹயக்கிரீவர், ஸ்ரீதன்வந்திரி சன்னதிகள், புதியதாக அமைக்கப்பட்டுள்ளன. இந்த சன்னதிகளில் பிரதிஷ்டை செய்வதற்காக, புதிதாக சுவாமி விக்ரகங்கள் வடிவமைக்கப்பட்டன. அதேபோல், பொய்கையாழ்வார், பூத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், மதுரகவியாழ்வார், குலசேகர ஆழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார் ஆகிய ஏழு பேரின் சிலைகள் செய்யப்பட்டுள்ளன. புதிய விக்ரகங்கள் நீர், தானியம், பூக்களில் வைக்கப்பட்ட பிறகு, கும்பாபிஷேகம் செய்து, பிரதிஷ்டை செய்ய வேண்டும்.அதன்படி, சுவாமி விக்ரகங்கள் மற்றும் ஆழ்வார் விக்ரகங்கள், கடந்த 9ம் தேதி ஜலாதி வாசம் என்படும் நீருக்குள் ஒரு வாரம் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இது, நிறைவடைந்ததை அடுத்து, நேற்று தான்ய வாசம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி, எம்பெருமான் மற்றும் தாயார்களுக்கு சிறப்பு திருமஞ்சனம், பூஜைகள் நடந்தன. அதன்பின், தானியங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, சிலைகள் மீது தூவப்பட்டன. இதில், திருப்பணிக்குழுவினர் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.வரும் 23ம் தேதியில் இருந்து ஒரு வாரம், சுவாமி சிலைகளுக்கு புஷ்பவாசம் செய்யப்படும். வரும் 27ல், முளைப்பாலிகை, தீர்த்தக்குட ஊர்வலமும்; 28ம் தேதி மாலை 5.00 மணிக்கு, கும்பாபிஷேக யாக சாலை பூஜைகளும் துவங்குகின்றன. டிச., 1ம் தேதி காலை, கும்பாபிஷேகம் நடக்கிறது.