பதிவு செய்த நாள்
21
நவ
2014
12:11
வான சாஸ்திரத்தின்படி, சொல்லப்படும் பருவ கால கணிப்புகள், அறிவியல் ரீதியானவை. பஞ்சாங்கத்தில் இடம் பெறுவதால் மட்டுமே, அதை ஜோசியம் என, சொல்வதை ஏற்க முடியாது’ என, பஞ்சாங்க தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர். கோவை வேளாண் பல்கலைக் கழகம், நடப்பாண்டின் வானிலை நிலவரம் குறித்த அட்டவணையை, விவசாயிகளுக்காக வெளியிட்டுள்ளது. இந்த அட்டவணை, பஞ்சாங்கம் அடிப்படையிலானது. ஒரு பல்கலைக் கழகம், அறிவியல் ரீதியான கருத்துக்களை, விவசாயிகளுக்கு சொல்லாமல், பஞ்சாங்கம் அடிப்படையில் சொல்வதை ஏற்க முடியாத எனக் கூறி, சில அமைப்பினர் போராட்டம் நடத்தி உள்ளனர்.
இந்த சர்ச்சை குறித்து, பஞ்சாங்கம் தயாரிப்பாளர்கள் கூறியதாவது: பாம்பு பஞ்சாங்கம் கணேஷ்குமார்: நடப்பு யுகம் கலியுகம். கலி பிறந்தது வெள்ளிக்கிழமை. அவர் பூமிக்கு வந்தது ஞாயிற்றுக்கிழமை. எனவே, வெள்ளிக்கிழமையை, வாரத்தின் முதல் நாளாக கணிக்கிறோம். ஒரு ராசியிலிருந்து, மற்றொரு ராசிக்கு, சூரியன் நகருவதை, ஓர் ஆண்டு என்கிறோம். இதற்கெல்லாம் ஆதார சித்தாந்த நுால்கள் உள்ளன. ‘வாசியகரணா’ நுாலைக் கொண்டு தான், பஞ்சாங்கத்தை கணித்து வருகிறோம். இதோடு, இன்னும் பிற, சித்தாந்த நுால்களும், பஞ்சாங்க தயாரிப்புக்கு வழிகாட்டுகின்றன. இந்துக்களைப் போல், கிறிஸ்தவ மதத்திலும், ‘கிரகோரியா காலண்டர்’ உள்ளது. சர்ச்சுக்குள் சூரிய நிழல் விழுவதை வைத்து, ‘நல்ல வெள்ளி’ நாளை கணக்கிடுகின்றனர்.
முஸ்லிம்கள் கூட, சந்திர பிறையை அடிப்படையாகக் கொண்டு தான், ரம்ஜான் பண்டிகையை அறிவிக்கின்றனர். வான சாஸ்திரத்தைக் கொண்டு தான், பருவ காலங்களையும், நாம் கொண்டாடும் பண்டிகை உள்ளிட்ட பிற அம்சங்களையும் கணிக்கின்றனர். அந்த அடிப்படையில், வேளாண் பல்கலைக் கழகம் வானிலையை முடிவு செய்திருக்கலாம். ஆனால், அவர்கள் எந்த பஞ்சாங்கத்தை பின்பற்றி, அந்த அட்டவணையை வெளியிட்டனர் என, தெரியவில்லை.
தாம்பரம் வானவியல் கழத்தின் அமைப்பாளரும், ஸ்ரீ தணிகை பஞ்சாங்கம் தயாரிப்பாளருமான பாலு சரவண சர்மா: வான சாஸ்திரம் என்பது தொன்மையானது. இந்தியாவின் வான சாஸ்திரமான, ‘பிருகத் சம்ஹிதை’ இன்றளவும் ஏற்றுக் கொள்ளக் கூடியது. சூரியனை அடிப்படையாகக் கொண்டு, வான சாஸ்திரம் கணிக்கப்படுகிறது. சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே உள்ள துாரத்தையும், பூமியிலிருந்து, சூரியன் எந்த கோணத்தில் உள்ளது என்பதை அடிப்படையாகக் கொண்டும், பூமியில் ஏற்படும் பருவ நிலையை கணிக்கின்றனர். இதன் அடிப்படையில் தான், அக்னி நட்சத்திரம் துவங்குவது, மழை மற்றும் குளிர்காலம் மற்றும் ஆடிப் பட்டம் துவங்குவதை சொல்கின்றனர்.
இது, முழுக்க முழுக்க அறிவியல். ஆனால், இந்த வான சாஸ்திரத்தைக் கொண்டு சொல்லப்படும் ஜோசியத்தில் உண்மை உள்ளதா, இல்லையா என்பது விவாதத்துக்கு உட்பட்டது. லண்டனில் உள்ள ராயல் சொசைட்டி, வான சாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்டு, வானிலை விவரங்களை சொல்கிறது. இந்த விவரங்களைக் கொண்டு தான், ‘பார்மர் அல்மனாக்’ என்ற நுால் வெளியாகிறது. 1700ம் ஆண்டில் இருந்து இந்த நுால் வெளியாகிறது. ‘அல்மனாக்’ என்றால் பஞ்சாங்கம் என்று பொருள். லண்டனிலிருந்து, வெளியாகும் ‘பார்மர் அல்மனாக்’ நுாலை யாரும் எதிர்க்கவில்லை. எனவே, வான சாஸ்திரத்தை, பஞ்சாங்கத்தில் சொல்வதால் மட்டுமே, அது ஜோசியம் என்று வாதிடக் கூடாது. வான சாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்டு, வேளாண் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள, விவசாயிகளுக்கான அட்டவணையில் தவறில்லை. இவ்வாறு, அவர்கள் கூறினர்.