பதிவு செய்த நாள்
25
நவ
2014
12:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி, நேற்றிரவு சிம்ம வாகனத்தில், பிடாரியம்மன் வீதியுலா நடந்தது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், ஆண்டுதோறும் கார்த்திகை தீப திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது.
அதன்படி, இந்த ஆண்டு தீப திருவிழா, நாளை, கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து, 10 நாட்கள் ஸ்வாமிகள் வீதியுலா நடைபெறும். வரும், 1ம் தேதி இரவு வெள்ளி தேரோட்டம், 2ம் தேதி மகா தேரோட்டம் நடக்கிறது. 10ம் நாளான வரும், 5ம் தேதி அதிகாலை, 4 மணிக்கு பரணி தீபமும், மாலை, 6 மணிக்கு, மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளது. தீப திருவிழாவின் தொடக்கமாக, நேற்று முன்தினம் இரவு, துர்க்கையம்மன் உற்சவம் நடந்தது. நேற்றிரவு, அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் உள்ள பிடாரி அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சிம்ம வாகனத்தில் வீதியுலா நடந்தது. இன்று இரவு (நவ.,25) விநாயகர் உற்சவமும், சிறப்பு வழிபாடுகளும் நடக்கிறது. அதேபோல், தீப திருவிழாவில், அண்ணாமலையார் வீதியுலா வரும் நாக வாகனம், 5.50 லட்சம் ரூபாய் மதிப்பில், தங்க முலாம் பூசப்பட்டது. அதனுடைய வெள்ளோட்டம் இன்று நடக்கிறது.