ஹயக்ரீவர் கோவில் உண்டியல் திறப்புரூ.3.29 லட்சம் காணிக்கை வசூல்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27நவ 2014 12:11
கடலூர், திருவந்திபுரம் ஹயக்ரீவர் கோவிலில் இந்து அறநிலையத் துறை சார்பில் அமைக்கப்பட்ட உண்டியலில் 3 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் காணிக்கை வசூலாகி உள்ளது. கடலூர், திருவந்திபுரத்தில் நடுநாட்டு திருப்பதி என போற்றப்படும் தேவநாத சுவாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்த தனி உண்டியல் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அவ்வப்போது திறந்த காணிக்கை எண்ணப்பட்டு, வங்கியில் வைப்பு நிதியாக செலுத்தப்பட்டு வருகிறது.
இக்கோவிலின் எதிரில் உள்ள மலையில் ஹயக்ரீவர் கோவில் உள்ளது. கல்விக்கு உகந்த கடவுளாக போற்றப்படும் இக்கோவிலுக்கு சமீப காலமாக பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இக்கோவிலில் இந்து அறநிலையத் துறை சார்பில் கடந்த ஜூலை 17ம் தேதி உண்டியல் நிறுவப்பட்டது.
இந்த உண்டியல் நிரம்பியதைத் தொடர்ந்து நேற்று காலை இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதி, ஆய்வாளர் கோவிந்தசாமி, கோவில் செயல் அலுவலர் நாகராஜன் ஆகியோர் முன்னிலையில் திறந்து காணிக்கை எண்ணப்பட்டது. இப்பணியில் வங்கி ஊழியர்கள், சாரண மாணவர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் என மொத்தம் 15 பேர் ஈடுபட்டனர்.
உண்டியலில் மொத்தம் 3 லட்சத்து 29 ஆயிரத்து 403 ரூபாய், 3 வெளி நாட்டு டாலர்கள், 10 கிராம் தங்கம், 76 கிராம் வெள்ளி பொருட்களை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.