பதிவு செய்த நாள்
29
நவ
2014
12:11
திருப்பூர்: விசாலாட்சி உடனமர் விஸ்வேஸ்வர சுவாமி மற்றும் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில்களில், ஆண்டுதோறும் வைகாசி விசாகத் தேர்த்திருவிழா சிறப்பாக நடந்து வருகிறது. அரியும், சிவனும் ஒன்று என்ற சமய உணர்வு கொங்கு நாட்டில் போற்றப்பட்டது. அதேபோல், திருப்பூரில் ஈஸ்வரன் மற்றும் பெருமாள் கோவில்கள் அருகருகே அமைந்துள்ளதோடு, கோவில்களுக்கு ஊழியத்துக்கு வழங்கப்பட்ட நிலங்களும் ஒன்றாக உள்ளதும், திருப்பூர் மக்களின் சமய ஒற்றுமையை காட்டுகிறது. ஆண்டு திருவிழாவாக விமரிசையாக கொண்டாடப்படும் தேர்த்திருவிழாவும் இங்கு ஒன்றாகவே நடத்தப்படுகிறது. முந்தைய நாள் விஸ்வேஸ்வரர் கோவில் தேரோட்டமும், மறுநாள் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் தேரோட்டமும் நடக்கிறது. விழா துவக்கமாக, திருப்பூரின் காவல் தெய்வமான செல்லாண்டியம்மன் கோவிலில் துவங்கி, கிராம சாந்தி,
அம்மன் திருவீதி உலா நடத்தப்படுகிறது. இரு கோவில்களிலும் கொடியேற்றம் ஒரே நேரத்தில் நடக்கிறது. விசாக நட்சத்திரத்தில் ஈஸ்வரன் கோவில் தேரோட்டமும், அனுஷம் நட்சத்திரத்தில் பெருமாள் கோவில் தேரோட்டமும் நடக்கிறது. பழங்காலத்தில், காலையில் ஈஸ்வரன் தேரோட்டமும், மாலையில் பெருமாள் தேரோட்டமும் நடந்துள்ளது. பிற்காலத்தில், அடுத்தடுத்த நாட்களுக்கு மாறியுள்ளது. இத்தேர்களில் அற்புதமான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. மனித வாழ்வியலையும், சுவாமிகளின் திருக்கோலங்களும் காட்சியாக செதுக்கப்பட்டுள்ளன. இரண்டு குதிரைகள் பூட்டிய தேராக அமைந்துள்ளது. தேர்களில் உள்ள சிற்பங்கள், தேர் அமைக்கப்பட்டுள்ள வடிவம் ஆகியவற்றைக் கொண்டு, இரண்டு கோவில்களின் பழமையை உணர முடியும். அந்தளவுக்கு அற்புதமான சிற்ப வேலைப்பாடுகளை கொண்ட தேர்களாகும்.
இரண்டு தேர்களுக்கு முன்பும், சிறிய தேரில் விநாயகர் எழுந்தருள்வதும், பெண்கள் மற்றும் குழந்தைகள் இழுத்துச் செல்வதும் சிறப்பானது.அந்தக்காலத்தில் நகரை சுற்றிலும் உள்ள நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்று தேர் இழுத்து, வழிபட்டுள்ளனர். மிகப்பிரமாண்டமாக, மாட்டுத்தாவணி எனப்படும் மாட்டுச்சந்தை நடந்துள்ளது. ஆயிரக்கணக்கான மாடு, குதிரை உள்ளிட்ட கால்நடைகள் விற்பனைக்கு வந்துள்ளன. திருவிழா கடைகள், பொழுதுபோக்கு அம்சங்கள், தற்போதுள்ள பழைய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் நடந்துள்ளன. சைவமும், வைணவமும் இணைந்த கோவிலாக இருப்பதோடு, வைகாசி விசாகத்தேர்த்திருவிழா ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக நடத்தப்படுகிறது. இத்தகைய சிறப்பு பெற்ற ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம், வரும் டிச., 1ல் கோலாகலமாக நடைபெற உள்ளது.