பதிவு செய்த நாள்
02
டிச
2014
11:12
திருப்பூர் : திருப்பூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம், ‘வெங்கட்ரமணா, கோவிந்தா,’ என்ற பக்தர்களின் முழக்கங்களுக்கு இடையே, நேற்று விமரிசையாக நடந்தது; லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நேற்று படுவிமரிசையாக நடந்தது. யாக சாலையில் இருந்து காலை 9.00 மணிக்கு, எம்பெருமான் புறப்பாடு நடந்தது. புனிதநீர் கலசங்களை பட்டாச்சாரியார்கள் தலையில் சுமந்து, கோபுரங்களுக்கு கொண்டு வந்தனர். எம்பெருமானுக்கு பிடித்த தாமரை மலர்களை தூவி, கலசங்களை பக்தர்கள் வரவேற்றனர்.வேத மந்திரங்கள் முழங்க, சரியாக 9.47 மணிக்கு, ஏக காலத்தில் மூலவர் விமானம், ராஜகோபுரம் உள்ளிட்ட அனைத்து கோபுரங்களுக்கும், புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. புனிதநீர் உடனடியாக சேகரிக்கப்பட்டு, ‘ஸ்பிரிங்லர்’ மூலம், பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராஜகோபால மணவாளமுனி சுவாமிகள் அருளாசி வழங்கினார். 10.30 மணிக்கு மூலவர் வீரராகவப் பெருமாள், தாயார்கள் மற்றும் பெருமாள்களுக்கு புனித நீரால் அபிஷேகம், தச தரிசனம், பொது தரிசனம் நடந்தது. உற்சவரான ஸ்ரீகனகவல்லி தாயார், ஸ்ரீபூமிதேவி தாயாருடன் ஸ்ரீவீரராகவப் பெருமாள், நவரத்தின ஆபரணங்கள் அணிந்து, கருவறைக்குள் காட்சி தந்தார்.
வட்டமடித்த கழுகு: பூ தூவிய ‘கிளைடர்’
* கும்பாபிஷேகத்தை காணவும், தரிசனம் செய்யவும் லட்சம் பக்தர்கள் திரண்டனர். காமராஜர் ரோடு, பூ மார்க்கெட் வீதி, அரிசி கடை வீதிகளில் பக்தர் கூட்டம் அலைமோதியது.
* கும்பாபிஷேக நிகழ்வுகளை, ஆன்மிக சொற்பொழிவாளர் நாகை முகுந்தன் வர்ணனை செய்தார். வாழும் கலை பயிற்சியாளர் அருண்மாதவன், தனது இன்னிசை பாடல்கள் மூலம் பெருமாள் பாடல்களை பாடினார்.
* கோவில் தெற்குவாசல் அருகே, மாநகராட்சி மருத்துவக் குழுவினர் முகாமிட்டிருந்தனர்.
* ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன.
* விமான கும்பாபிஷேகம் நடப் பதற்கு சில நிமிடங்கள் முன்னதாக, இரண்டு கழுகுகள், கோவில் வளாகத்தை வட்டமிட்டபடி பறந்து சென்றன.
* தனியார் அமைப்புகள் சார்பில், பக்தர்களுக்கு குடிநீர், சுக்குபால் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
* பகல் 12.00 மணிக்கு பிறகே பக்தர்கள், தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர் என்ற ஒலிபெருக்கி அறிவிப்பால், தெற்குவாசல் அருகே, தீபங்களை ஏற்றி பலர் வழிபட்டனர்.
* அன்னதான பந்தலில் தக்காளி சாதம், தயிர் சாதம், நெய் போண்டா, ஜிலேபி பரிமாறப்பட்டன. அமர்ந்து சாப்பிடும் வகையிலும், ‘பபே’ முறையிலும் அன்னதானத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
* கும்பாபிஷேகம் முடிந்ததும், ‘கிளைடர்’ மூலமாக கோபுரங்களுக்கு பூ தூவப்பட்டது.
* ‘தினமலர்’ சார்பில் இலவசமாக வழங்கப்பட்ட ‘ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா’ சிறப்பு மலரை, பக்தர்கள் ஆர்வத்துடன் வாங்கி படித்தனர்.
ஆச்சரிப்பட வைக்கும் முக்கிய நிகழ்வுகள்!
* திருப்பூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவிலில், இதற்கு முன், 1939ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்துள்ளதாக பதிவு உள்ளது. அப்போது, சொர்க்கவாசல் புதுப்பிக்கப்பட்டு, புதிதாக தேர் செய்து, தேரோட்டம் நடத்தப்பட்டுள்ளது.
*1968-69ல் நடந்த கும்பாபிஷேகத்தின்போது, தற்போது கலெக்டர் அலுவலகம் செயல்படும் காட்டன் மார்க்கெட் வளாகத்தில், சிவாஜி கணேசன் நடித்த, ‘வியட்னாம் வீடு’ நாடகம் நடத்தி, நிதி திரட்டப்பட்டு, சிற்ப வேலைப்பாடுகளுடன் முன்மண்டபம் கட்டப்பட்டது. அக்காலத்தில் கிருபானந்த வாரியார், ஐகோர்ட் நீதிபதி இஸ்மாயில் உள்ளிட்டோரின் ஆன்மிகச் சொற்பொழிவுகள் நடத்தப்பட்டு, நிதி திரட்டப்பட்டுள்ளது.
*1979-80ல், ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற ஒரு கோடி அர்ச்சனை பெருவிழா நடந்தது.
*1983ல், ராஜகோபுரம் மற்றும் மூலவர் விமான திருப்பணி, காஞ்சி ஜெயேந்திரரால் துவக்கி வைக்கப்பட்டது. ஸ்ரீசிருங்கேரி சாரதா பீடம் ஸ்ரீபாரதி தீர்த்த சுவாமிகள் முன்னிலையில், கும்பாபிஷேகம் நடந்தது.
* கடைசியாக, 1999 ஜூன் 24ல் கும்பாபிஷேகம் நடந்தது; 15 ஆண்டுகள், ஆறு மாதங்கள் கழித்து, நேற்று கும்பாபிஷேகம் கோலாகமாக நடந்துள்ளது.
* 2008ல், நொச்சூர் ஸ்ரீவெங்கடரா பாகவதரின் மகா உற்சவம்; 2009ல், ஒரு கோடி ராம ஜெப வேள்வி நடந்துள்ளது.
* 2009 செப்., 10ல் திருப்பதி ஸ்ரீமலையப்பர் சுவாமி திருக்கல்யாண உற்சவம், இடுவம்பாளையம் அரசு பள்ளியில் நடந்தது. ஸ்ரீஅலமேலு மங்கா, ஸ்ரீபத்மாவதி தாயார் சமேதரராக எழுந்தருளிய ஸ்ரீமலையப்பர், பெருமாள் கோவிலுக்கு வருகை புரிந்தார்; ஸ்ரீவீரராகவப் பெருமாள் எதிர் சேவை புரிந்தார். அதன்பின், தற்போது பிரமாண்டமாக ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது.