மிகநுட்பமான ஊதுகருவி இது. அனசு, உலவுடன் கூடிய இரண்டு நீளமான பித்தளைக் குழல்கள், குவிந்து கூர்ந்து நிற்கும் முகப்பு இரண்டையும் ஒரு சேர வாயில் வைத்து ஊத வேண்டும். மிகுந்த பயிற்சியும், உடல் வலுவும் உள்ளவர்கள் மட்டுமே திருச்சின்னம் வாசிக்க முடியும். குடமுழுக்கு நிகழ்வுகளில் பூர்ணாஹுதி தட்டைச் சுமந்து வரும்போதும், திருத்தேர் உற்சவத்தில் தேர்த்தட்டில் அமர்ந்தும் திருச்சின்னம் வாசிக்கப்பட வேண்டும். அக்காலத்தில் வாசிக்கப்பட்டுள்ளது. தற்போது திருச்சின்னம் வாசிப்பது என்பது அரிதாகிவிட்டது.
திருமடங்கள், ஆதீனங்கள், சன்னிதானங்கள் ஒடுக்கத்திலிருந்து பூஜைக்குக் கிளம்பும் சமயம் திருச்சின்னம் வாசித்து அறிவிக்கும் வழக்கம் இருந்துள்ளது. அகோபில மடத்தின் ஜீயர் அழகிய சிங்கர் திருநட்சத்திர நாளின்போது பட்டினப்பிரவேசம் செய்வது வழக்கம். அக்காலத்தில், அப்போது அவருக்கு முன்பாகத் திருச்சின்னம் இசைத்தபடி கலைஞர்கள் செல்வார்கள். ஸ்ரீரங்கம் கோயிலில் மங்கள ஆரத்தி தொடங்குவதற்கு முன்பாக தற்போதும் திருச்சின்னம் வாசிக்கப்டுவது சிறப்பு.