Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » ஸ்வயம்பிரகாச ஸ்வாமிகள்
ஸ்வயம்பிரகாச ஸ்வாமிகள்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

02 டிச
2014
03:12

ஆன்மிகம் தழைத்தோங்கும் நம் பாரத தேசத்தின் அருங்கொடையே மகான்கள்தான்.  இவர்கள், இறைவனின் அவதாரமாகக் கருதப்படுகிறார்கள்.  இன்னல்கள் தீர்க்கும் குருவாகப் போற்றப்படுகிறார்கள்.  காஞ்சி மகா ஸ்வாமிகளை சிவ சொரூபமாகவே கருதி அவருக்கு ருத்திராட்சம் மற்றும் வில்வ மாலைகள் சூட்டி, ஈசனையே கண் குளிரக் கண்டதும்போல் தரிசித்து மகிழ்ந்த பக்தர்கள் ஏராளம்.  தாங்கள் வணங்கும் தெய்வ வடிவங்களை, நடமாடும் மகான்களின் வடிவில் கண்டு வணங்கினார்கள், பேரின்பம் பெற்றவர்கள். ஷீரடி சாய்பாபாவின் பக்தர் ஒருவர், பண்டரிபுரத்தில் உறையும் ஸ்ரீபண்டரிநாதனின் மீது அளவு கடந்த பக்தி கொண்ட தன் நண்பரை அழைத்துக்கொண்டு ஷீர்டி சென்றார்.  அங்கே சாய்பாபாவை வணங்கச் சென்றபோது, பண்டரிநாதன் பக்தரையும் உடன் அழைத்தார.

பாபாவை நான் வணங்க மாட்டேன்.  அவர் எனக்கானவர் இல்லை என்று மறுத்தார் நண்பர்.  மகானான சாய்பாபா  இதை எல்லாம் அறியாதவாரா? விடவில்லை.  எந்த பண்டரிநாதனைக் கண்டால் கன்னத்தில் போட்டுக்கொண்டு அந்த நண்பர் உருகி தரிசிப்பாரோ.  அந்த பண்டரிநாதனாகவே அவருக்குக் காட்சி தந்து அருளினார் ஷீர்டி மகான். ஆம்! இறை நெறி எங்கும் பரவ, வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு ஆத்மாக்களை  அனுப்பி வைத்துக்கொண்டே இருக்கின்றான் இறைவன்! கலியுக மக்கள்தான் அதை உணர்வதில்லை.  தர்மம் நலிந்து அதர்மம் பரவும் போதெல்லாம் நான் அவதரித்துக் கொண்டே இருப்பேன் என்று கிருஷ்ண பரமாத்மா, கீதையில் சொல்லி இருக்கிறார்.

தெய்வ பக்தி தேசமெங்கும் பரவி, ஆன்மிக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதற்கு இந்த மகான்கள் துணை நின்றார்கள்.  வேதத்தின் சாராம்சத்தையும் சாஸ்ரத்தின் கருத்துகளையும் மக்கள் மத்தியில் இவர்கள் எடுத்து வைத்தார்கள். இந்து மதத்தைப் பொறுத்தவரை ஆதிசங்கரரில் இருந்து இது ஆரம்பம்.  அவரது பாதையை அடியொற்றி எத்தனையோ மகான்கள், மகரிஷிகள், துறவிகள் இந்த பூமியில் அவதரித்துள்ளார்கள்.  எந்த நோக்கத்துக்காக அவர்களுடைய அவதாரம் நிகழ்ந்துள்ளது என்பதையும் இறைவன் இந்த மகான்களுக்கும் ஒரு கட்டத்தில் எடுத்துரைத்தான். இப்படி, இந்த பூமியில் அவதரித்து மகான்களுள் ஒருவரே ஸ்வயம்பிரகாச அவதூத ஸ்வாமிகள்.  அவதூதர்களில் சிலர் உடலில் ஒரு பொட்டுத் துணிகூட இல்லாமல்.  திகம்பரராகத் (நிர்வணமாக) திரிவர்.  இதை அருவருப்பாக எண்ணக்கூடாது.  இது பக்தியின் ஒர நிலை.  அவதூத பரம்பரையின் ஆதி குரு தத்தாத்ரேய பகவான்.

விஸ்வரூப ஆஞ்சநேய மூர்த்தியும் நாமகிரித் தாயாருளள் நரசிம்ம மூர்த்தியும் அருள் பாலிக்கும் தலம் நாமக்கல்.  இந்த நகருக்கு அருகில் உள்ள சேந்தமங்கலத்தில் தத்தகிரி எனப்படும் குன்றில் தத்தாத்ரேயர் கோயில் கொண்டுள்ளார்.  கொல்லிமலைச்சாரலில் குன்றுகள் சூழ பொலிவோடு அமைந்திருக்கும் அழகிய ஊர் சேந்தமங்கலம்.  நாமக்கல்லில் இருந்து சுமார் 11 கி.மீ. தொலைவு.  பேருந்து வசதிகள் உண்டு. தத்தாத்ரேயர் சந்நிதியின் நேர் கீழே ஸ்வயம்பிரகாச ஸ்வாமிகள் அதிஷ்டானம் அமைந்துள்ளது.  இந்த ஆலயத்தைத் தன் குருவான தத்தாத்ரேயரின் ஆணைப்படி இங்கே கட்டி, முதல் கும்பாபிஷேகத்தை 29.5.1931ல் செய்து வைத்தார் ஸ்வயம்பிரகாச ஸ்வாமிகள். அதன்பிறகு, ஸ்வயம்பிரகாசரின்  சீடரான சாந்தானந்த ஸ்வாமிகள் இதே திருக்கோயிலில் ஸ்ரீமுருகப் பெருமான் விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்து 20.2.1983ல் மகா கும்பாபிஷேகம் செய்து வைத்தார்.  சாந்தானந்த ஸ்வாமிகளின்  பணி அதோடு நின்றுவிடவில்லை.  ஸ்கந்தாஸ்ரம் பாரம்பரியத்துக்கே உரித்தான முறையில் தத்தகிரியின் அடிவாரத்தில் மேலும் பல விக்கிரங்களை பிரமாண்ட முறையில் நிறுவினார் சாந்தானந்த ஸ்வாமிகள் ஹேரம்ப மகாகணபதி, ஐயப்பன், தட்சிணமூர்த்தி. பஞ்சமுக ஆஞ்சநேய மூர்த்தி, சனைச்சரர், கருப்பண்ணசாமி, இடும்பன், தத்தகங்கை ஆகிய சந்நிகளை அமைத்தார்.  ஸ்ரீதத்தகிரி முருகன் சபா மண்டபம் என்கிற திருநாமத்துடன் பெரிய மண்டபம் ஒன்றையும் கட்டுவித்தார் சாந்தானந்த ஸ்வாமிகள்.

குன்றுதோறும் குடியிருக்கும் முருகப் பெருமான். தத்தகிரியில் சுமார்ஆறேகால் அடி உயரத்தில் அருள் புரிகிறார்.  வலது கையில் ஞானத்தின் சின்னமான வேல்.  இடது கையை இடுப்பின் மீது வைத்து, புன்கை தவழக் காட்சி தரும் இந்த முருகனைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். இந்த திருக்கோயிலுக்கு 14.7.08 அன்று குடமுழுக்கு விமரிசையாக நடந்துள்ளது.  இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் கீழ் வரும் இந்தத் திருக்கோயிலுக்குத் திருப்பணியையும் குடமுழுக்கு செய்யும் அருங்காரியத்தையும் ஏற்றுக்கொண்டு சிறப்பாகச் செய்து முடித்தார் ஸ்வாமி ஓங்காராநந்தர். இந்தக் கும்பாபிஷேகத்துக்கு சுமார் ஐம்பது லட்ச ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டுள்ளது.  இந்தத் தொகையை சென்னையில் உள்ள ஸ்ரீசாந்தானந்த சத்சங்க டிரஸ்ட் என்கிற அமைப்பே ஏற்றுக்கொண்டது பாராட்டப்டட வேண்டியது.  தன் பரமகுருவான ஸ்வயம்பிரகாசரின் அதிஷ்டானத்தை உலகளாவிய பார்வைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவும் பக்தி நெறி தழைத்தோங்கவும் ஸ்வாமி ஓங்காராநந்தரே முன்னின்று இந்தக் கும்பாபிஷேக வைபவத்தை நடத்தி முடித்தார். பல்லாயிரக்கணக்கான மக்கள் அந்தச் சிறு கிராமத்தில் அன்றைய தினம் ஒட்டுமொத்தமாகத் திரண்டது. ஸ்வயம்பிரகாசரின் மகிமை என்றே சொல்ல வேண்டும். மண்டலாபிஷேகம் பூர்த்தியாகும் வரையில் சேந்தமங்கலத்திலேயே தங்கியிருந்தார் ஸ்வாமி ஓங்காராநந்தர்.  இந்தக் கோயில் இங்கு அமைவதற்குக் காரணமாக இருந்த ஸ்வயம்பிரகாசரைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்துகொள்வது அவசியம்.

எதன் மேலும் பற்றில்லாத மகான்களின் தன்மையை, அவதூதம் என்பர்.  இவர்கள் உணவு, உடை, வசதியான வாழ்க்கை போன்றவற்றில் பற்றில்லாதவர்கள்.  அதாவது இவர்களின் உள்ளத்தை ஆசைகள் மறைக்காது; வயிற்றைப் பசி மறைக்காது! இப்படிதான் அவதூதராக இருந்தார் ஸ்வயம்பிரகாசர். விழுப்புரத்தில் இருந்து சுமார் 16 கீ.மி. தொலைவில் உள்ள  கல்பட்டு என்கிற கிராமத்தில் 28.12.1871 அன்று தோன்றினார் ஸ்வாமிகள்.  இவருடைய தந்தையார் ராமசாமி சாஸ்திரிகள்.  தாயார் ஜானகி குழந்தைக்கு கிருஷ்ண மூர்த்தி என்ற நாமகரணம் சூட்டினர் பெற்றோர்.  குடும்பத்தில் வறுமை இருந்தாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் தன் மகனை சாஸ்திரம், வேதம் முதலானவற்றைக் கற்று தேர்வதற்கு நன்றாகப் பயிற்சி கொடுத்தார் தந்தை. ஏழாவது வயதில் உபநயனம், திருவிடைமருதூரில் ஆங்கிலக்கல்வியில் தேர்வு 19வது வயதில் மெட்ரிகுலேஷன் தேர்வில் தேர்ச்சி நாராயண சாஸ்திரிகளிடம் தர்க்கம், மீமாம்சம், வியாகரணம் முதலானவற்றைக் கற்றது, தவிர தமிழில் புலமை பெற தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்யபிரபந்தம், திருக்குறள் முதலானவற்றைக் கற்றல் என்று போனது ஸ்வயம்பிரகாசரது கல்விக் காலம்.

குடும்பம் என்ற பந்தத்தில் இருந்து விடுதலையாகி. வாரணாசி சென்று மன்னார்குடி ராஜு சாஸ்திரிகள்.  திருவண்ணாமலை தட்சிணாமூர்த்தி ஸ்வாமிகள் ஆகியோரிடம் அனுக்கிரகம் பெற்றார்.  மதுரையில் ஜட்ஜ் ஸ்வாமிகளிடம் சந்நியாசம் ஏற்று உபதேசம் பெற்றார்.  அப்போது ஜட்ஜ் ஸ்வாமிகள்,  இடுப்பில் ஒரே வஸ்திரத்துடன் உன் தாயாரிடம் செல்.  அவரை மூன்று முறை வலம் வந்து பிரார்த்தித்து நமஸ்காரம் செய்.  அங்கேயே சிறிது நேரம் இரு.  அதன்பின் உனது விருப்பப்படி அவதூதம் நிகழும். நீ விரும்பியபடி ஆன்மிக பலத்தைப் பெறுவாய்.  இறைவன் அருள் உனக்குப் பரிபூரணமாக இருக்கிறது என்று அருளினார். அதன்படியே ஸ்வயம்பிரகாசர் அன்னை இருந்த இடத்துக்குச் சென்று அவரை மூன்று முறை வலம் வந்து.  அவருடன் சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருந்தார்.  புறப்படலாம் என்று அவர் எழுந்தபோது, அவரை அறியாமலேயே அவர் இடுப்பில் இருந்து ஏகவஸ்திரம் நழுவி பூமியில் விழுந்தது.  ஸ்வயம்பிரகாசர் அவதூதப் பரம்பரையில் தன்னைச் சேர்த்துக்கொண்டது இப்படித்தான்.  அப்போது ஸ்வாமிகளுக்கு வயது 28.

அவதூதராகிப் பல தங்களுக்கு ஸ்வாமிகள் சென்றபோதெல்லாம் அறியாமையால் பலரும் அவர் மீது கல் எறிந்தார்கள். கிண்டல் செய்தார்கள்.  அவருக்கு நெருப்பு வைத்தார்கள்.  சந்நியாச வாழ்க்கையில் தன்னை இணைத்துக்கொண்ட ஸ்வாமிகள் கோபப்படவில்லை.  பிறருடைய தவறான செயல்களுக்காக இறைவனிடம் மன்னிப்புக் கோரினர்.  பாதயாத்திரையாகவே பல தலங்களுக்கும் சென்றார்.  சுமார் 18 ஆண்டுகள் அவருடைய யாத்திரை நீடித்தது.  மகானின் காலடி பட்டதால் அந்த இடங்கள் புனிதமாயின.  இறுதியில் சேந்தமங்கலம் வந்து ஆன்மிகப் பணிகளைத் தொடர்ந்தார்.  1948 டிசம்பர் மாதம் தனது 71 வது வயதில் மகா சமாதி அடைந்தார் ஸ்வயம்பிரகாசர், அவருடைய வாழ்வில் நடந்த  சில அற்புதங்களைப் பார்ப்போம். ஒரு முறை, திருச்சி-கரூர் இடையே உள்ள லாலாபேட்டை என்ற கிராமத்தில் பெருக்கெடுத்தோடும் காவிரி நதியை, ஸ்வாமிகள் கடக்க நேரிட்டது.  அப்போது அவர் திகம்பரராக இருந்தால் பரிசலில் அவரை ஏற்ற மறுத்துவிட்டனர் பரிசல் ஓட்டிகள்.  பரிசலில் அவர் ஏறினால் மற்ற பயணிகள் அருவருப்படைந்து இறங்கிவிடுவார்களே, தங்களது வருமானம் போய்விடுமே என்று பரிசல் ஓட்டிகள் கவலை  கொண்டனர்.

பார்த்தார் ஸ்வாமிகள் தன் கையில் அப்போது வைத்திருந்த பனை ஓலை விசிறியை வெள்ளத்தில் மிதக்கவிட்டார்.  அதன் மீது ஏறி நின்று பயணித்து, ஆற்றின் மறு கரையை அடைந்தார்.  பரிசலில் இருந்தவர்களும் பரிசல் ஓட்டிகளும் அவருடைய சித்து வேலையைக் கண்டு பிரமித்து.  மறு கரைக்கு வந்தவுடன் அவருடைய கால்களில் விழுந்து தங்கள் செயலுக்கு மன்னிப்புக் கேட்டனர்.  சித்து வேலை என்பது அந்த நேரத்தில் கூடி வருவது! இதை செய்யப்போகிறேன் என்று எவரும் முன்னறிவிப்பு கொடுத்து செய்துகாட்ட மாட்டார்கள். சந்நியாசிக் கரடு என்பது சேந்தமங்கலத்தில், சந்நியாசிகள் கூடும் ஒரு குன்று.  இதன் முகப்புப் பகுதியில் உள்ள குகை ஒன்றுக்குள் சென்று தொடர்ந்து ஆறு மாதங்கள் நிரிவிகல்ப சமாதியில் (உள்ளுக்குள்ளும் வெளியேயும் என்ன நடக்கிறது என்று எதுவும் தெரியாது.  தன் மேல் ஒரு பாம்பு ஊர்ந்தால் கூட உணர்வுகள் இருக்காது இதையே பரப்பிரம்ம நிலை என்று கூறுவார்கள்) இருக்கத் தீர்மானித்தார்.  குகைக்குள் தன்னை வைத்துப் பூட்டுமாறு சிஷ்யர்களிடம் சொன்னார். குருவின் வாக்கை மீறாத சிஷ்யர்கள், குகையைப் பூட்டிவிட்டு, வாயிலியே குருவின் நாமத்தை உச்சரித்தபடி தங்கினர்.

ஸ்வாமிகள் நிர்விகல்ப சமாதியில் இருப்பதைக் கேள்விப்பட்ட அக்கம்பக்கத்து கிராமத்து மக்கள், சந்நியாசிக் கரடை அடைந்து குகை வாசலில் நின்று அவரை தரிசித்துச் சென்றனர்.  அப்போது சேலத்தில் இருந்த டெபுடி கலெக்டர் ஒருவர்.  இந்த விஷயத்தை அறிந்தார்.  தனி மனிதனை இப்படிப் பூட்டி வைப்பது அவரை சித்ரவதை செய்வதாகும் என்பது அவரது பணிக்கு எட்டிய அறிவு.  எனவே, பதறியபடி ஊழியர்களுடன் ஜீப்பில் குகை வாசலுக்கு வந்து சேர்ந்தார். சிஷ்யர்களிடம் பூட்டைத் திறக்கச் சொன்னார்.  குருவின் உத்தரவுக்கு முன் அதிகாரியின் அதட்டல் எம்மாத்திரம்! குருவை இந்த நிலையில் தொந்தரவு செய்யக்கூடாது.  அந்த பாவச் செயலை செய்ய மாட்டோம் என்று சிஷ்யர்கள் மறுத்துவிட்டனர்.
பார்த்தார் டெபுடி கலெக்டர்.  தனது சிப்பந்தியை அதிகாரமாக அழைத்து பூட்டை உடனே உடைத்தெறி என்றார்.  கட்டளைக்குப் பணிந்து அவரும் அதை உடைத்தெறிந்தார். உள்ளே, கிழக்கே தலையும் மேற்கே காலுமாகத் தரையில் படுத்திருந்தார் ஸ்வயம்பிரகாசர்.  அவருக்கு அப்போது உலகப் பிரக்ஞை இல்லை.  உடல் இளைத்து எலும்பும் தோலுமாகக் காட்சியளித்தார்.  இந்தக் காட்சியைக் கண்டதும் சீடர்கள், குருவே.....! என்று கண்ணீர் விட்டுப் புலம்பினர்.  ஸ்வாமிகளின் உடலில் உயிர் இல்லை என்பதை சில வினாடிகளில் தீர்மானித்த டெபுடி கலெக்டர்.  அதே சிப்பந்தியை அழைத்து, உடலை வெளியே எடுத்துவரச் சொன்னார்.  சிப்பந்தியும் அவ்வாறே செய்தார். இது நடந்து ஒரு சில வினாடிகள்தான் ஆகி இருக்கும்.  தூக்கத்தில் இருந்து எழுபவர் போல சமாதி கலைந்து சட்டென எழுந்தார் ஸ்வயம்பிரகாசர்.  அவரது உடலிலும் செயலிலும் எந்த ஒரு தளர்வும் இல்லை.  முன்பு இருந்தைவிட மிகுந்த பிரகாசமாகக் காணப்பட்டார்.

இதைக்கண்டு பிரமிப்படைந்த டெபுடி கலெக்டர்.  ஸ்வாமிகளின் கால்களில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கி, தனது செயலுக்கு மன்னிப்புக் கேட்டார்.  அவரது உடல் பதறியது.  இதே நிர்விகல்ப சமாதி காலத்தில், ஸ்வாமிகளைப் பற்றி இன்னொரு விஷயமும் சொல்வார்கள் பூட்டிய குகைக்குள் இருந்த அதே நேரத்தில் மலைக் காடுகளில் அவர் சுற்றித் திரிந்ததையும் பலர் கண்டிருக்கிறார்கள்! ஸ்வயம்பிரகாசர் சேந்தமங்கலம் வந்து சேர்ந்த புதிதில், அங்குள்ள குகையில் நிஷ்டையில் இருந்த நேரங்களில் நிர்விகல்ப சமாதி கைகூடியது.  அப்போது எவரும் அவரைப் பார்க்க வரமாட்டார்கள் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் ஒரு பெரிய கருநாகமும் அவருடன் இருக்குமாம்.  அடியார்கள் எவரேனும் அந்த நேரத்தில் ஸ்வாமிகளை தரிசிக்க வந்தால், ஸ்வாமிகளின் வேண்டுகோளுக்கு இணங்கி பாம்பு அகன்று விடுமாம். மும்மூர்த்திகளின் அம்சமாக அத்ரி மகரிஷி-அனுசூயா தம்பதிக்கு அவதரித்தவர் தத்தாத்ரேயர்.  வடக்கே பத்ரிகாசிரமத்தில் ஸ்வயம்பிரகாசர் கடுந்தவத்தில் இருந்தபோது, தென்னாட்டில் தமக்குக் கோயில் எழுப்புமாறு அவருக்கு உத்தரவிட்டார் தத்தாத்ரேயர்.  தன்னுடைய ஆதி குருவான அந்த பகவானுக்கு, பின்னாளில் குகையின் மேல் அழகான கோயில் எழுப்பி, தன் திருக்கரங்களாலேயே 1931ல் குடமுழுக்கு செய்து வைத்தார் ஸ்வயம்பிரகாசர்.

அவதூதர் என்பதால், பிறர் கண்களில் அதிகம் படக்கூடாது என்பதற்காக ஸ்வயம்பிரகாசர் குகையில் வசித்து வந்தார்.  அந்த குகை (குகாலயம்) இன்றும் நம் தரிசனத்துக்கு இருக்கிறது.  இந்தியா முழுவதும் எங்கெங்கேயோ சுற்றித் திரிந்த அந்த மகான், இறுதிக் காலத்தில் அந்த குகையிலேயே சமாதி ஆனார். ஸ்வாமிகளின் உடல் வேண்டுமானால் இன்று நம் கண்களுக்குப் புலப்படாமல் இருக்கலாம்.  ஆனால் இன்று நம்மிடையே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.  நாடி வருபவருக்கு, அவருடைய ஆன்ம பலமும் சக்தியும் இன்றும் பல நன்மைகளைச் செய்துகொண்டுதான் இருக்கிறது. சேந்தமங்கலத்தில் உள்ள அவருடைய அதிஷ்டானத்துக்கு வந்து.  அந்தத் திருவுருவை மனக் கண் முன் நிறுத்தி, தியானித்து வணங்குவோருக்கு நிச்சியம் காட்சி தருவார் அவர். மந்திராலய அதிஷ்டானத்தில் சில நூறு ஆண்டுகளாக ஜீவித்து வரும் ராகவேந்திர ஸ்வாமிகள், அதிகாலை நேரத்தில் ஸ்நானம் செய்வதற்காக, துங்கபத்திரை நதிக்கரையில் பாதரட்சையுடன் நடந்து செல்லும் ஒலியை இப்போதும் பலர் கேட்கின்றனர்.  அதுபோல் உண்மையான பக்தியுடனும் ஆத்ம ஸுத்தியுடனும் செல்பவர்களுக்கு , ஸ்வயம்பிரகாசரின் தரிசினம் நிச்சயம் கிடைக்கும்.  அவருடைய அருளுக்கும் ஆசிக்கும் பாத்திரமாகும் பாக்கியம் உண்டு. ஸ்வயம்பிரகாசரின் திருப்பாதம் பணிந்து, அவரது சந்நிதி இருக்கும் சேந்தமங்கலம் நோக்கி வணங்குவோம்!

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar