பதிவு செய்த நாள்
06
டிச
2014 
12:12
 
 திருப்பூர்: கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு, கோவில்களில் சிறப்பு பூஜை செய்யப்பட்டன; தீபங்கள் ஏற்றப்பட்டன. கார்த்திகை தீப திருநாள், திருப்பூர் கோவில்களில் நேற்று கொண்டாடப்பட்டது. கொங்கணகிரி கந்த பெருமான் கோவிலில், சுப்ரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபஸ்தம்பத்தில் கார்த்திகை விளக்கு ஏற்றப்பட்டது. விஸ்வேஸ்வரர் கோவிலில், மூலவர், விசாலாட்சியம்மன், சுப்ரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சொக்கப்பனை கொளுத்தப்பட்டு, பக்தர்கள் வழிபட்டனர். கோவில் கொடி மரம் முன் பெரிய தீபம் ஏற்றப்பட்டது. பெண்கள் தீபங்கள் ஏற்றி வழிபட்டனர்.
கோட்டை மாரியம்மன் கோவில், போலீஸ் லைன் மாரியம்மன் கோவில், செல்லாண்டியம்மன் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. தீபஸ்தம்பம் மற்றும் சொக்கப்பனை கொளுத்தப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் நேற்று சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, வள்ளி, தெய்வானையுடன் சுப்ரமணியம் சப்பரத்துக்கு எழுந்தருளினார். வீதி உலா முடிந்ததும், கோவிலில் தீபங்கள் ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர். திருக்கார்த்திகையை முன்னிட்டு, கோவில்களில் நேற்று காலை முதலே பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. வீடுகள், நிறுவனங்களிலும் பொதுமக்கள் கோலமிட்டு, தீபங்கள் ஏற்றி வழிபட்டனர்.
அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் விசேஷ பூஜை, வழிபாடுகள் நடந்தன. அவிநாசியப்பர், கருணாம்பிகை அம்மன், சுப்ரமணியர் சன்னதிகளில் சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடந்தன. மயில் வாகனத்தில் சுப்ரமணியரும், ரிஷப வாகனத்தில் சந்திரசேகரரும் சிறப்பு அலங்காரத்தில், தீப ஸ்தம்பம் முன் எழுந்தருளினர். வேத பாராயணத்துக்கு பின், கோவில் முன்புள்ள 75 அடி உயர தீப ஸ்தம்பத்தில், திருக்கோடி தீபம் ஏற்றப்பட்டது. பக்தர்கள், "அண்ணாமலையாருக்கு அரோகரா என கோஷமிட்டனர்.