குன்றக்குடியில் கார்த்திகை தீபம் ஏராளமான பக்தர்கள் தரிசனம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06டிச 2014 02:12
காரைக்குடி: திருக்கார்த்திகை விழாவையொட்டி குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் நேற்று கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.திருக்கார்த்திகை விழாவையொட்டி, குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் நேற்று காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து 11 மணிக்கு சந்தன அபிஷேகம் நடந்தது. மாலை 5 மணிக்கு சுவாமி கீழிறங்கி, கார்த்திகை மண்டபத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளினார். அங்கு அவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. மாலை 6.40 மணிக்கு சுவாமி அங்கிருந்து மலையை நோக்கும் நிகழ்ச்சி நடந்தது.
அப்போது அண்ணாமலை தீபம் மலை உச்சியில் ஏற்றப்பட்டது. பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் தீபத்தை வழிபட்டனர். தொடர்ந்து சுவாமி வீதி உலா நடந்தது. முன்னதாக மாலை 5.30 மணிக்கு குன்றக்குடி ஆதின மடத்தில் சிறப்பு வழிபாடு குன்றக்குடி பொன்னம்பல அடிகள் தலைமையில் நடந்தது. அதை தொடர்ந்து பொன்னம்பலஅடிகள் பரணி தீபம், சொக்கப்பனை ஏற்றினார்.சிங்கம்புணரி: கார்த்திகையை முன்னிட்டு பிரான்மலையில் 2500 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது. நேற்று காலை அடிவார மங்கை பாகர்கோயிலில் சாமிகும்பிட்டு ஐந்தூர் கிராமத்தினர், பரம்புமலை பால் குட விழா குழு ,கிரிவலக் குழுவினர் தீபம் ஏற்ற மலைக்குச் சென்றனர். மலை மீதுள்ள பாலமுருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. மாலை 5 மணிக்கு தீபக்குன்று,பாலமுருகன் கோயில் தீபத்தொட்டியில் மகாதீபம் ஏற்றப்பட்டது.பக்தர்களுக்குஅன்னதானம் வழங்கப்பட்டது. பிரான்மலையை சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமத்தினர் மலைத் தீபம் பார்த்து கார்த்திகை விரதம் நிறைவேற்றினர்.