பதிவு செய்த நாள்
11
டிச
2014
11:12
உலக மகா கவிஞர்களின் வரிசையில், மிடுக்குடன் நிற்கிறார் பாரதி. இந்திய நாட்டின் விடுதலை இயக்கம் தீவிரமடைந்த காலத்தில், சுடர் விட்ட கவிஞன் பாரதி. கடந்த 1947, இந்தியா விடுதலையடைகிறது. 1921ல், பாரதி இறந்து விடுகிறார். அதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னால், நாடு விடுதலையடைந்த பின், என்ன செய்ய வேண்டும் என்று, முழுமையான செயல் திட்டத்தை வகுத்துக் கொடுத்த ஒரே கவிஞன், பாரதி தான்.
தோள் கொட்டுவோம்: பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்... என்ற தேசியப் பாடலின் வாயிலாக, நாட்டிற்குத் தேவையான, முழுமையான செயல் திட்டத்தை வகுத்துக் கொடுத்து, தனிச் சிறப்பெய்துகிறார். அக்கவிதையில் தான், வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம்; அடி மேலைக் கடல் முழுவதும் கப்பல் விடுவோம்; பள்ளித்தலமனைத்தும் கோவில் செய்குவோம்; எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம் என்று துவங்குகிறார். அதில், பள்ளித் தலமனைத்தும் கோவில் செய்குவோம் என்ற சொற்றொடருக்கு, பள்ளிக்கூடங்களையெல்லாம் புனிதமாகக் கருதுவோம் அல்லது புனிதமுள்ளவைகளாகச் செய்வோம் என்று தான், இதுநாள் வரை பெரும்பான்மையினர் பொருள் கூற, நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், அச்சொற்றொடரின் பொருள், முற்றிலும் வேறுபட்டதாகத் தெரிகிறது. சும்மா கிடக்கிற நிலங்கள் அனைத்தும், செல்வம் கொழிக்கச் செய்வோம்; பயனுள்ளதாக செய்வோம் என்பது தான், அச்சொற்றொடரின் பொருள். கிட்டத்தட்ட, 60 ஆண்டுகளுக்கும் மேலாக, நாட்டில் நிலவி வரும் ஒரு பொருளுக்குப் பதிலாக, முற்றிலும் வேறுபட்ட தெளிவானதொரு பொருளை, இச்சொற்றொடருக்குக் கொடுப்பதில், அதிக கவனம் செலுத்தி, ஆதாரங்களைத் தேடி, சூழ்நிலையெல்லாம் கணக்கில் எடுத்து ஆராய்ந்த பின் தான், அது முடிந்தது என்றால் அது மிகையல்ல.
தரிசு நிலம்: பாரதி நுாற்றாண்டின் போது, பாரதியை, பாரதியாகப் பார்த்ததன் விளைவு தான் இந்த முடிவு. பள்ளித்தலம் என்றால் துாங்கிக் கிடக்கிற, சும்மா கிடக்கிற, தரிசாகக் கிடக்கிற நிலம் என்று பொருள். புயற்காற்று, திருப்பள்ளியெழுச்சி ஆகிய கவிதைகளில், பள்ளி என்ற சொல்லை, துாங்குகிற என்ற பொருளில் பயன்படுத்தியிருக்கிறார். ஆகவே, வலிந்து பொருள் கொண்டதாகாது. அதோடு, விடுதலையடைந்த பின், நாட்டில் செயல்படுத்த வேண்டிய திட்டத்தைக் கொடுக்கிற கவிஞன், நாட்டை பூகோள ரீதியாக மலை, கடல், நிலம் என்று பிரிப்பது தான் இயல்பாகும். மலையையும், கடலையும் பாடிய பாரதி, அடுத்தாற் போன்று பள்ளிக் கூடங்களைப் பாடினார் என்றால், அது தர்க்கரீதியாகவும் பொருத்தமற்றதாகி விடுகிறது. வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம் என்பதில், வட எல்லையிலிருக்கும் மலைப் பகுதியைப் குறிப்பிட்டு, நாட்டின் பாதுகாப்பை வலியுறுத்துகிறார். அடி, மேலைக்கடல் முழுவதும் கப்பல் விடுவோம் என்பதன் மூலமாக, நாட்டின் கடற்பகுதியில் என்ன செய்ய வேண்டும் என்று குறிப்பிடுகிறார்.
மலைப் பகுதியையும், கடற்பகுதியையும் குறிப்பிட்ட கவிஞன், அடுத்தது நிலப்பகுதியைத் தான் குறிப்பிட முடியுமே தவிர, பள்ளிக்கூடங்களைக் குறிப்பிட்டார் என்று கூறுவது, கொஞ்சமும் பொருந்துவதாக இல்லை. மேலும், இதே கவிதையின் பிற்பகுதியில், ஆலைகள் வைப்போம்; கல்விச் சாலைகள் வைப்போம் என்று பாடியிருப்பதால், பள்ளிக் கூடங்களைப் பற்றி, கவிதையின் முற்பகுதியில் பாடியிருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போகிறது. அப்படி பாடியிருந்தால், கூறியது கூறல் என்னும் குற்றத்திற்கு ஆளாகி விடுகிறார். ஆகவே, பள்ளித்தலம் என்று பாரதி குறிப்பிட்டிருப்பது, நாட்டில் சும்மா கிடக்கிற, துாக்க நிலையிலுள்ள நிலப்பகுதியே ஆகும் என்பதும் தெளிவாகிறது.
புனிதம்: அதனால், பள்ளித்தலம் என்பதற்கு துாக்க நிலையில், சும்மா கிடக்கும் தரிசு நிலம் என்பதும், கோவில் என்பதற்கு செழிப்பு, செல்வம், புனிதம் என்பதும், மயக்கமற்ற தெளிவான பொருளாகும். மேலும், அச்சொற்றொடரில் பள்ளி என்றோ அல்லது பள்ளிக்கூடம் என்றோ அல்லது பள்ளிகளனைத்தும் என்றோ கவிஞர் குறிப்பிடாமல், பள்ளித்தலமனைத்தும் என்று குறிப்பிட்டிருப்பதை, சற்று ஆழமாக ஆராயும் போது, தலம் என்ற சொல், இடம் என்ற பொருளிலும், அனைத்தும் என்ற சொல், முழுவதும் என்ற என்ற பொருளிலும் குறிப்பிட்டிருப்பது, நாடு முழுவதுமுள்ள, துாக்க நிலையில், சும்மா கிடக்கிற தரிசு நிலங்கள் தான் என்பது புலனாகிறது. (பொதுச் செயலர், மனிதநேயப் பேரவையின் உலக சமாதான நட்புறவுப் பூங்கா, கோவை.)