பதிவு செய்த நாள்
20
டிச
2014
12:12
மோகனூர்:முனியப்பன் ஸ்வாமிக்கு, 23 அடி உயரத்தில், 1,750 கிலோ எடையுள்ள, ஐம்பொன் வேல் வடிவமைக்கும் பணி முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. டிசம்பர், 26ம் தேதி பிரதிஷ்டை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.நாமக்கல் மாவட்டம், மோகனூர் அடுத்த மணப்பள்ளி, அரிவாளுக்கு பெயர் பெற்றது. இங்கு, அரிவாள், சம்மட்டி ஆகியவை தயார் செய்வதற்காக, 10க்கும் மேற்பட்ட இரும்பு பட்டறைகள் உள்ளன. இங்கு, முனியப்பன் ஸ்வாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, 2013, நவம்பர், 21ம் தேதி, இரண்டு டன் எடையில், 26.5 அடி நீளத்தில், நாமக்கல்லில் தயார் செய்யப்பட்ட மகாராஜா வேல், ராட்சத கிரேனில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, பிரதிஷ்டை செய்யப்பட்டது.
அதை தொடர்ந்து, ஐம்பொன் வேல் செய்து பிரதிஷ்டை செய்ய முடிவு செய்யப்பட்டு, கடந்த, 27ம் தேதி அப்பணி துவங்கப்பட்டது. அதை தயாரிக்கும் பணியில், அதே பகுதியை சேர்ந்த பட்டறை உரிமையாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தங்கம், வெள்ளி, செம்பு, இரும்பு, பித்தளை ஆகிய ஐம்பொன் கலந்து தயாரிக்கப்படும் வேல், 23 அடி உயரமும், 1,750 கிலோ எடையும் கொண்டது. மேலும், ஐந்து அடுக்கில், 750 மணிகள் பொருத்தப்படுகிறது. அவற்றின் மதிப்பு, 4.50 லட்சம் ரூபாய். ஐம்பொன் வேல் செய்யும் பணியில், தினமும், ஐந்து பேர் ஈடுபட்டுள்ளனர். டிசம்பர், 23ம் தேதி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பணிகள் அனைத்தும் முடிந்ததும், டிசம்பர், 26ம் தேதி பிரதிஷ்டை செய்யப்படுகிறது.இது குறித்து கோவில் நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: மணப்பள்ளியில், சிறியது முதல், 15 அடி உயரம் வரை அரிவாள் தயாரிக்கப்படுகிறது. அவ்வாறு தயாரிக்கப்படும் அரிவாள், சுற்று வட்டாரம் மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களுக்கு வாங்கிக் சென்று, ஸ்வாமி முன் வைத்து வழிபாடு செய்கின்றனர். அதுமட்டுமின்றி, கரும்பு வெட்டும் அரிவாளும் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. ஆர்டரின் பேரிலும், இரும்பை பயன்படுத்தி அரிவாள் தயாரிக்கப்படுகிறது. அதற்காக, இப்பகுதியில், 10க்கும் மேற்பட்ட பட்டறைகள் செயல்படுகிறது. 75க்கும் அதிகமானோர் பணியாற்றுகின்றனர். அந்த அனுபவத்தின் மூலம், ஐம்பொன் வேலை வடிவமைக்க முடிவு செய்து, பணியை துவக்கினர். தற்போது பணி முடியும் தருவாயில் உள்ளது. விரைவில், முடிக்கப்பட்டு, டிசம்பர், 26ம் தேதி பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.