பதிவு செய்த நாள்
22
டிச
2014
03:12
பொது வாழ்விற்காக அர்ப்பணித்தவர்கள் சேவை செய்வதற்கு நேரம், காலம் பார்ப்பதுஇல்லை. அதேநேரம், இனம், மொழி, மதம், ஜாதி என்ற குறுகிய வட்டத்திற்குள் தங்களை நிலைநிறுத்திக் கொள்பவர்கள் சேவையாளர்களாக கருதப்படமாட்டார்கள். ஒருமுறை தனக்குத் தெரிந்தவரின் வீட்டில் இயேசு அமர்ந்துஇருந்தார். அப்போது, வேற்று இனத்தை சேர்ந்த பெண் அங்கு வந்து அவரை சந்திக்க வேண்டுமென அடம்பிடித்தார்.வேறு வழியில்லாமல் இயேசுவிடம் அந்த பெண்ணை அழைத்துச் சென்றனர். இயேசுவை பார்த்தவுடன் கதறியழுத அவள், தன்னுடைய மகள் அசுத்த ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு அவதிப்படுவதால், காப்பாற்றும்படி வேண்டினார். அங்கிருந்த அனைவருக்கும் அந்த பெண் மொழி, மதம், ஜாதி, இனத்தால் வேறுபட்டவர் என்பது தெரியும்.
அதை புரிந்து கொண்ட இயேசு, அந்த பெண்ணிடம், “வீட்டில் உள்ள குழந்தைகள் வயிறார உணவு உண்ட பின்புதான் மிச்சம் மீதியிருப்பதை நாய்களுக்கு அளிப்பர். அதற்கு முன்னதாக எவரும் நாய்க்கு உணவு அளிக்க மாட்டார்கள்,” என்றார். பதிலுக்கு அந்த பெண், “உண்மைதான் ஐயா. ஆனால், குழந்தைகள் உணவு உண்ணும்போது, மேஜையிலிருந்து கீழே சிதறும் உணவை நாய்கள் தின்னலாம் அல்லவா?” என கேட்டார்.இயேசு அந்தப் பெண்ணிடம், “உனது நம்பிக்கையே உன் மகளை குணப்படுத்தியது. நீ வீட்டிற்குச் செல்லலாம்,” என்றார். அந்த நிமிடமே அவரது மகள் முழுமையாகக் குணமடைந்திருந்தார். இனம், மொழி, மதம், ஜாதி அனைத்தும் மனிதர்கள் தங்கள் சுயநலத்திற்காக உருவாக்கியவை. இந்த வேலிகளை உடைத்தெறிய முன்வருபவர்களே இறைவனுக்கு உகந்தவர்களாகக் கருதப்படுவர்.